செய்திகள்
டி-20 உலக கிண்ணத்தில் இருந்து பாகிஸ்தானும் வௌியேறுகிறதா?

Jan 24, 2026 - 07:47 PM -

0

டி-20 உலக கிண்ணத்தில் இருந்து பாகிஸ்தானும் வௌியேறுகிறதா?

இந்தியாவுக்குச் செல்ல மறுத்த பங்களாதேஷ் அணியை 2026 டி20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து ஐ.சி.சி உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ள நிலையில், இத்தொடரில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்தும் தற்போது நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. 

இது குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். 

பங்களாதேஷ் நீக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கருத்துத் தெரிவித்த நக்வி, ஐ.சி.சி இந்தியாவுக்குச் சாதகமாக இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாகவும், பங்களாதேஷிற்கு இழைக்கப்பட்டது அநீதியாகும் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். 

உலகக்கிண்ணப் பங்கேற்பு தொடர்பான எமது நிலைப்பாடு பாகிஸ்தான் அரசாங்கம் எனக்கு வழங்கும் அறிவுறுத்தலுக்கு அமையவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் தற்போது நாட்டில் இல்லை. அவர் திரும்பியதும் இறுதி முடிவை அறிவிப்பேன். இது அரசாங்கத்தின் முடிவு. நாங்கள் ஐ.சி.சி-க்கு அல்ல, அரசாங்கத்திற்கே கட்டுப்படுவோம் என்று அவர் கூறினார். 

கடந்த ஒரு வாரமாக, போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரிய பங்களாதேஷிற்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்கி வருகிறது. 

கடந்த வாரம் நடைபெற்ற ஐ.சி.சி கூட்டத்தில், பங்களாதேஷின் நிலைப்பாட்டிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மட்டுமே ஆதரவு வழங்கியது. 

இத்தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கூட்டாக நடத்தப்படுகின்ற போதிலும், பங்களாதேஷின் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே திட்டமிடப்பட்டிருந்தன. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அறிவுறுத்தலின் பேரில் ஐ.பி.எல். 2026 குழாமை விட்டு பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜனவரி 3ஆம் திகதி உத்தரவிடப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, இந்தியாவில் விளையாடுவது தமக்கு பாதுகாப்பானதல்ல என பங்களாதேஷ் கூறியிருந்தது. 

பங்களாதேஷின் கோரிக்கையைத் தொடர்ந்து நிராகரித்த ஐ.சி.சி, அட்டவணையை அப்படியே ஏற்பது அல்லது தொடரிலிருந்து நீக்கப்படுவது என இவ்வாரத் தொடக்கத்தில் நிபந்தனை விதித்தது. 

பங்களாதேஷ் தமது முடிவில் உறுதியாக இருந்ததால், இன்று அவர்களைத் தொடரிலிருந்து நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தைச் சேர்ப்பதாக ஐ.சி.சி உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 

இந்த முடிவை விமர்சித்த நக்வி, "பங்களாதேஷிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி இரட்டை நிலைப்பாட்டை எடுக்க முடியாது. ஒரு நாட்டுக்கு, இந்தியா அவர்கள் நினைத்ததைச் செய்யவும், மற்றவர்கள் அதற்கு நேர்மாறாகச் செய்யவும் வற்புறுத்த முடியாது. இதனால்தான் நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். பங்களாதேஷ் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய பங்குதாரர், அவர்கள் உலகக்கிண்ணத்தில் விளையாட வேண்டும், என்றார். 

பங்களாதேஷிற்கு ஆதரவாக பாகிஸ்தான் உலகக்கிண்ணத்தைப் புறக்கணிக்கக்கூடும் என செய்திகள் வெளியாகிய போதிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதனை உறுதிப்படுத்த மறுத்துள்ளது. 

பாகிஸ்தான் அரசாங்கம் விளையாட வேண்டாம் எனக் கூறினால், ஸ்காட்லாந்திற்குப் பிறகு ஐ.சி.சி ஒருவேளை 22வது அணியைக் கொண்டுவர வேண்டியேற்படும். முடிவு அரசாங்கத்திடமே உள்ளது என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05