Jan 26, 2026 - 12:05 PM -
0
தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் கடவத்த டிப்போவுக்குச் சொந்தமான பேருந்தொன்றில், திடீரென தடையாளி (Brake) செயலிழந்தது. எனினும், சாரதியின் சாதுரியமான செயற்பாட்டினால் பேருந்து மண் மேடொன்றில் மோதி நிறுத்தப்பட்டு, பாரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், கினிகத்தேனை கடவல வளைவு பகுதியில் இன்று (26) அதிகாலை 5:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான மகேஷ் சுதர்சன் (49 வயது) என்பவரே இந்தப் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். குறுகிய வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் பயணித்தபோது, பேருந்தின் தடையி செயலிழந்ததை அவர் உடனடியாக உணர்ந்துள்ளார். பேருந்து கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுக்க, பாதையோரத்திலிருந்த மண் மேடொன்றில் மோதி அதனைப் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார். சம்பவத்தின் போது பேருந்தில் 80 பயணிகள் பயணித்துள்ளனர்.
எனினும் பேருந்திற்கு மட்டும் சிறிய சேதம் ஏற்பட்டாலும், பயணிகள் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் சாரதி பேருந்தை கட்டுப்படுத்த தவறியிருந்தால் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்தை ஏற்படுத்தியிருக்கும் என பேருந்தில் இருந்த பயணிகள் தெரிவித்தனர்.
கினிகத்தேன பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
--

