Jan 26, 2026 - 08:56 PM -
0
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை இளையோர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நமீபியாவின் வின்ட்ஹோக் நகரில் இன்று (26) நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முக்கிய விபரங்கள் வருமாறு:
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணியின் தலைவர் விமத் தின்சர முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஒஸ்மான் சதாத் நிதானமாக ஆடி 61 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் ருஹுல்லா அரப் அதிரடியாக 22* ஓட்டங்களைக் குவித்தார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் விரான் சமுதித மற்றும் குகதாஸ் மதுலன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
194 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பம் சற்று சவாலாக அமைந்தது. எனினும், திமந்த மஹவிதான மற்றும் செனுஜ வெக்குனகொட ஆகியோரின் நிதானமான ஆட்டம் அணியை வெற்றியை நோக்கி இட்டுச் சென்றது.
இறுதியில் 46.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

