Jan 27, 2026 - 12:01 PM -
0
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும் முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என்று அழைக்கப்பட்டதுமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, தனது பிரதம நிறைவேற்று அதிகாரியாக சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் அவர்களை நியமித்துள்ளதாக பெருமிதத்துடன் அறிவித்துள்ளது.
2024 செப்டெம்பர் முதல் பிரதம தொழிற்பாட்டு அதிகாரியாகப் பதவி வகித்து வந்த ஸ்ரீ கணேந்திரன் அவர்கள் கடந்த நான்கு மாதங்களாக பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பொறுப்பேற்றிருந்தார்.
இவர் சுமார் 27 வருட கால வங்கியியல் அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன் அவரது தொடர்ச்சியான தொழில் வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச வங்கிகளில் சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகளை வகித்துள்ளார். அதன்போது அவர் செயற்பாடுகள், கிளை வங்கியியல் (தனிநபர் மற்றும் சிறிய, நடுத்தர தொழில்முனைவோர் பிரிவுகள்), செயற்பாட்டு இடர், வியாபாரத் தொடர்ச்சி முகாமைத்துவம், வியாபார ஒன்றிணைப்பு, செயல்முறை மீள்பொறியியல், செயற்பாட்டு சிறப்பு, விற்பனை ஆளுகை மற்றும் கடனட்டை செயற்பாடுகள் ஆகிய பிரிவுகளில் ஆழ்ந்த அனுபவத்தை பெற்றுக் கொண்டார். ஏராளமான தகைமைகளை பெற்றுள்ள அவர், American City பல்கலைக்கழகத்தில் MBA பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும் இவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவக் கணக்காளர் நிறுவனத்தின் (CIMA) அங்கத்தவர் என்பதுடன் பிணையங்கள் மற்றும் முதலீட்டிற்கான பட்டய நிறுவகத்தின் (CISI) இணை அங்கத்தவரும், இலங்கை தொழில்முறை வங்கியியலாளர்கள் சங்கத்தின் அங்கத்தவரும் ஆவார்.
ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் தலைவரான ராஜேந்திர தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில், “எமது இந்த முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தில் பிரதான தலைமைத்துவ பொறுப்பிற்கு சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் அவர்களை வரவேற்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அவரின் வளமான அனுபவம், ஆற்றல் மற்றும் ஊழியர்கள் மீது கவனம் செலுத்தும் தலைமைத்துவ பாணி ஜனசக்தி பைனான்ஸ் நிறுவனத்தை வலிமைப்படுத்தி, வழிநடத்திச் செல்வதற்கு இன்றியமையாத பண்புகளாக அமைவதுடன் முன்னெடுக்கப்படும் சகல செயற்பாடுகளிலும் வினைத்திறனான தொடர்ச்சித் தன்மையை உறுதி செய்யும்.” என்றார்.
பிரதம நிறைவேற்று அதிகாரியாக கணேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதனூடாக, தங்கு தடையற்ற செயற்பாடுகள் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் ஜனசக்தி பைனான்ஸின் ஆழமான அர்ப்பணிப்பு மீளுறுதி செய்யப்பட்டுள்ளது. நம்பகமான நிதித் தீர்வுகளை வழங்கும் நோக்கத்திற்கான அதன் அர்ப்பணிப்பை உறுதி செய்வதுடன், புத்தாக்கங்களுக்காக தொடர்ச்சியாக வாய்ப்புகளை கண்டறிந்து, வாடிக்கையாளர்களுக்கும் சமூகங்களுக்கும் வினைத்திறனான சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக விரிவாக்கம் செய்வதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.
ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது) ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச் சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 44 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச்சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்றுள்ளதுடன் LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலையும் பெற்றுக் கொண்டுள்ள நிறுவனமாகும்.

