Jan 27, 2026 - 02:38 PM -
0
2026 டி20 உலகக் கிண்ண போட்டியில் இந்தியாவுடனான தனது ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்த முக்கியப் போட்டியில் இருந்து விலக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.
போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதைத் தவிர்ப்பது ஐசிசி இற்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய பிசிபி பரிசீலிக்கும் என்று பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும், ஒட்டுமொத்த போட்டியிலிருந்தும் முழுமையாக விலகுவது குறித்து பிசிபி தலைவர் மோஷின் நக்வி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் இடையே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும், இது குறித்து விவாதிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் நக்வி,
இது குறித்து முன்பு மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தங்கள் அணியை இந்தியாவுக்கு அனுப்ப மறுத்ததை அடுத்து, ஐசிசி பங்களாதேஷிற்கு பதிலாக ஸ்காட்லாந்தை அறிவித்தபோதே, பாகிஸ்தான் போட்டித் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய நக்வி,
"நாங்கள் உலகக் கிண்ணத்தில் விளையாடுகிறோமா இல்லையா என்ற முடிவு அரசாங்கத்தால் எடுக்கப்படும். அரசாங்கத்தின் முடிவு இறுதியானது. அவர்கள் 'வேண்டாம்' என்று சொன்னால், ஐசிசி வேறு எந்த அணியையும் அழைக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
பங்களாதேஷின் கோரிக்கையை ஏற்று, அந்த அணியின் ஆட்டங்களை இந்தியாவில் இருந்து மாற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்த ஒரே நாடு பாகிஸ்தான் தான். ஐசிசியின் இந்த முடிவை நக்வி 'அநீதி' என்று கண்டித்தார். எனினும், உலக அமைப்பு, உலகக் கிண்ணத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், போட்டிகளை மாற்றும் முடிவு எதுவும் இல்லை.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பது பாகிஸ்தானுக்கு தோல்வியாக அமையும். 'ஏ' பிரிவில் அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகளும் உள்ளன. இந்த இரண்டு புள்ளிகளை இழப்பது, அடுத்த சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய மூன்று ஆட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். மேலும், ஒட்டுமொத்த போட்டியிலிருந்தும் விலகுவது பிசிபி-க்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐசிசி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடுமையானதடைகளை விதிக்க ஐசிசி தயாராக இருப்பதாக தெரிகிறது.

