Jan 27, 2026 - 03:41 PM -
0
தரமற்ற நிலக்கரி காரணமாக நாட்டின் மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மின் உற்பத்தி இழப்பை ஈடுசெய்வதற்கு, களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின்நிலையத்தை இயக்க வேண்டும் என வலுசக்தி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின்நிலையம் மூலம் 165 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்ததாக உள்ளதால், தற்போது தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்கக்கூடிய மின்சாரத்தின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தரவு அறிக்கைகளை மேற்கோள் காட்டி வலுசக்தி நிபுணர் கலாநிதி விதுர ரலபனாவ குறிப்பிடுகையில், மூன்று நிலக்கரி மின் உற்பத்தி அலகுகளும் முழுமையாக இயங்கும் போது 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டும். ஆனால் தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்துவதால் தற்போது அதிகபட்சமாக 715 மெகாவாட் மின்சாரத்தை மாத்திரமே உற்பத்தி செய்ய முடிகிறது.
இதன்படி, ஒரு நாளைக்கு 95 மெகாவாட் மின்சாரம் இழக்கப்படுவதுடன், அந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அதிக செலவில் எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளதாகவும் கலாநிதி விதுர ரலபனாவ சுட்டிக்காட்டுகிறார்.
இந்த நிலக்கரித் தொகுதி ஜனவரி மாதம் 20 மற்றும் 22 ஆம் திகதிகளில் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், நெப்தாவைப் (Naphtha) பயன்படுத்தி களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின்நிலையத்தை இயக்கினால், மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள உற்பத்தி இழப்பை ஈடுசெய்ய முடியும் என வலுசக்தி நிபுணர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், சர்ச்சைக்குரிய நிலக்கரி டெண்டரின் கீழ் பெறப்பட்ட நிலக்கரியின் தரம் குறித்து எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக இந்த வருடத்திற்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு நடந்தால் நாடு கடுமையான வலுசக்தி நெருக்கடியைச் சந்திக்கும் என்று மின்சாரத் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னதாக நிலக்கரி கொள்வனவை நிறைவு செய்ய வேண்டும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக நிலக்கரியை தரையிறக்க முடியாது போகும்.
நாட்டின் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை தலா 60,000 மெட்ரிக் தொன் வீதம் குறைந்தது 38 கப்பல்களில் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் அந்த எண்ணிக்கையில் இதுவரை மூன்று கப்பல்கள் மாத்திரமே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் மின் நுகர்வில் மூன்றில் ஒரு பங்கு நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதன் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களின் உற்பத்தி குறைந்தால் நாடு கடும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படும்.

