செய்திகள்
"கறுப்பு ஜனவரி": மட்டக்களப்பில் சுடர் ஏற்றி ஊடகவியலாளர்கள் அஞ்சலி!

Jan 27, 2026 - 10:31 PM -

0

"கறுப்பு ஜனவரி": மட்டக்களப்பில் சுடர் ஏற்றி ஊடகவியலாளர்கள் அஞ்சலி!

படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் இன்று (27) மாலை தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

 

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் 'கறுப்பு ஜனவரி' மாதத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு அருகில் இப்போராட்டம் நடைபெற்றது.

 

மட்டக்களப்பு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

 

மட்டக்களப்பு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றப்பட்டு, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

 

அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தீப்பந்தம் ஏந்திப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

 

இப்போராட்டம் நடைபெற்ற இடத்தில் பொலிஸாரும் புலனாய்வுத் துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். 

 

இதன்போது, "படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்கு", "கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கே?", "ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து" போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

 

நாட்டின் உள்ளகப் பொறிமுறையில் ஊடகவியலாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளதன் காரணமாக, சர்வதேச நீதிப் பொறிமுறையின் கீழ் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05