Jan 28, 2026 - 02:31 PM -
0
யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவைக் குறைப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கோரி, அப்பகுதியில் வசிக்கும் வைத்தியர் உமாசுகி நடராஜா தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக 'அத தெரண' நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இம்மனு அழைக்கப்பட்டது.
இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், யாழ்ப்பாணப் பகுதியில் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதன் காரணமாக அப்பகுதியில் காற்று மாசடைவு கடுமையாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், தென்னிந்தியாவிலிருந்து காற்று மூலமாக அடித்து வரப்படும் கழிவுகள் காரணமாகவும் அப்பகுதியில் பாரிய காற்று மாசடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவின் தன்மையைக் காட்டும் அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சட்டத்தரணி, இந்தக் காற்று மாசடைவு காரணமாக நோய் நிலைமைகள் தீவிரமடையக் காரணமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசடைவைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் உத்தரவிட்டது.
இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள யாழ்ப்பாண மாநகர சபையால் மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து ஏன் செயற்பட முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இவ்வாறான பிரச்சினைகளை அரச நிறுவனங்கள் இணைந்து கலந்துரையாடித் தீர்த்துக்கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இவ்வாறான விடயங்களை வழக்குகள் மூலம் நீதிமன்றத்திற்குக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டார்.

