சினிமா
பராசக்தி ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு!

Jan 31, 2026 - 01:31 PM -

0

பராசக்தி ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 25 ஆவது திரைப்படமாக வெளிவந்த ‘பராசக்தி’, வெளியான நாளிலிருந்து தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்து வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் திகதி திரையரங்குகளில் ரிலீசான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சிவகார்த்திகேயன் கெரியரில் ஒரு மைல்கல் படமாக கருதப்பட்ட பராசக்தியில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்திருந்தார். 

அதர்வா, சிவகார்த்திகேயனின் சகோதரராக நடித்ததும், ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் வந்ததும் படத்திற்கான ஹைப்பை இன்னும் அதிகரித்தது. இதனுடன் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்ட கதையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. திரையரங்குகளில் வெளியான முதல் சில நாட்களில் பராசக்தி நல்ல வசூலை பதிவு செய்தது. ஆனால் படம் முழுவதுமாக ரசிகர்களை கட்டிப்போடவில்லை என்ற விமர்சனமும் சமமாக எழுந்தது. 

“சுதா கொங்கராவின் முந்தைய படங்களில் இருந்த தாக்கம் இதில் முழுமையாக இல்லை” என்று சில விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், தயாரிப்பு தரப்பு இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் டிராக்கர்களின் தரவுகள் படி பராசக்தி ஒட்டுமொத்தமாகவே வெறும் 85 கோடி தான் வசூலித்துள்ளதாம். 

பொங்கல் விடுமுறைகள் முடிவடைந்ததும், புதிய படங்கள் திரைக்கு வந்ததால் பராசக்தியின் வசூல் வேகம் குறைய தொடங்கியது. ஆரம்பத்தில் கோடிகளில் வந்த வசூல், தற்போது லட்சங்களாக சரிந்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், இப்படத்தின் தியேட்டர் ஓட்டம் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையில், பராசக்தியின் ஓடிடி ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கமாக தமிழ் திரைப்படங்கள் 28 நாட்களுக்குள் டிஜிட்டல் தளங்களில் வெளியாகினாலும், பராசக்தியை 48 நாட்கள் கழித்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் பார்த்தால், படம் பிப்ரவரி மாத இறுதியில் தான் ஓடிடிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அப்படம் முன்கூட்டியே ஓடிடிக்கு வருவது உறுதியாகி உள்ளது. அதன்படி பராசக்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 7-ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

முக்கியமாக, பராசக்தி படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 தளம் கைப்பற்றியுள்ளது. அதனால் திரையரங்குகளில் பார்க்க தவறியவர்கள், அல்லது மீண்டும் படம் பார்க்க விரும்புபவர்கள், பிப்ரவரி 7 முதல் ஜீ5 இல் பராசக்தியை காணலாம். மொத்தத்தில், தியேட்டர்களில் கலவையான வரவேற்பை பெற்ற பராசக்தி, ஓடிடி வெளியீட்டின் மூலம் இரண்டாவது சுற்றை தொடங்க தயாராகியுள்ளது. டிஜிட்டல் ரிலீஸுக்குப் பிறகு ரசிகர்களின் கருத்து எப்படி மாறும் என்பதே இப்போது சினிமா வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05