வணிகம்
சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

Feb 5, 2026 - 11:36 AM -

0

சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

SSC மைதானத்தில் அதிநவீன Floodlighting மின்னொளித் தொகுதியொன்றை திட்டமிட்டு, விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் செயற்பாட்டுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பணிகளை DIMO நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் மூலம், கொழும்பு நகரில் சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடிய இரண்டாவது மைதானமாகவும், தேசிய மட்டத்தில் இத்தகைய வசதிகளைக் கொண்ட ஐந்தாவது மைதானமாகவும் SSC மைதானம் மாறியுள்ளது. அத்துடன், இவ்வருடம் நடைபெறவுள்ள ICC ஆடவர் T20 உலகக்கிண்ண தொடர் நடத்தப்படவுள்ள 3 மைதானங்களில் ஒன்றாக SSC மைதானம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

1980களில் இலங்கையின் முதலாவது மைதானத்திற்கு Floodlighting தொகுதியை அறிமுகப்படுத்தியதில் இருந்து DIMO மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடையிலான நீண்டகால உறவு ஆரம்பமானது. அன்றிலிருந்து இன்றுவரை, இந்த SSC மைதானம் உள்ளிட்ட நான்கு சர்வதேச கிரிக்கெட் மைதானங்களுக்கு DIMO Floodlighting தீர்வுகளை வழங்கியுள்ளது. இலங்கையில் இத்தகைய வசதிகளைக் கொண்டுள்ள ஐந்து மைதானங்களில் நான்கிற்கு DIMO நிறுவனமே Floodlighting தொகுதிகளை வழங்கியுள்ளமை ஒரு விசேட அம்சமாகும். இந்த புதிய மின்னொளித் தொகுதியானது, நவீன சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் தொழில்நுட்ப மற்றும் ஒளிபரப்புத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரவு நேரங்களில் மைதானத்தின் தெளிவுத்தன்மையை அதிகரிப்பதோடு, தொலைக்காட்சி ஒளிபரப்பின் தரம் மற்றும் பார்வையாளர்களின் அனுபவத்தை உயர் மட்டத்தில் பேணுகிறது. இயற்கையான பகல் வெளிச்சத்திற்கு நிகரான ஒளியை வழங்கும் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் இதில் உள்ளதனால், வீரர்கள் மற்றும் நடுவர்கள் இரவு நேரத்திலும் மிகுந்த நம்பிக்கையுடன் செயற்பட வழிவகுக்கிறது. 

இந்த மின்னொளித் தொகுதியானது உயர்தர (HD) தொலைக்காட்சி ஒளிபரப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு. நேரடி ஒளிபரப்புகள், சலன மீள் ஒளிபரப்புகள் மற்றும் DRS முடிவுகளைத் திரையில் மிகவும் தெளிவாகவும் இயல்பாகவும் காண்பிக்க இது உதவுகிறது. 

இத்திட்டத்திற்காக 630 உயர்தர LED மின்விளக்குகள், ஆறு உயர் கோபுரங்களில் நிறுவப்பட்டுள்ளதோடு, இதற்காக 62 கிலோமீற்றர் நீளமான கேபிள் வலையமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோபுரத்திற்கும் தனித்தனியான கட்டுப்பாட்டு அறைகள் உள்ளதோடு, DMX தொழில்நுட்பத்தின் கீழ் மத்திய மற்றும் தொலைதூர கட்டுப்பாட்டு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த Floodlighting தொகுதி மின்சார நுகர்வை குறைத்து, வெப்பத்தையும் மிகக் குறைந்த அளவில் வெளியிடுகிறது. மேலும், பயிற்சி வேளைகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காகவும் இதனை இலகுவாகப் பயன்படுத்த முடியும் என்பது இங்கு விசேட அம்சமாகும். 

இது குறித்து, DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித் புஷ்பவெல தெரிவிக்கையில், “ஆரம்பத்திலிருந்தே எமது முக்கிய நோக்கம், ICC இன் ஒளித்தரத் தரநிலைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதாகவே இருந்தது. SSC மைதானத்தின் தனித்துவமான புவியியல் வடிவமைப்பு மற்றும் செயற்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப இந்தத் தொகுதியை வடிவமைத்தோம். சர்வதேச மட்டத்திலான நிலையான செயல்பாட்டிற்காக வலுவான பொறியியல் வடிவமைப்புகள் மற்றும் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் இங்கு பின்பற்றப்பட்டுள்ளன.” என்றார். 

இந்த முழுமையான தீர்வினுள், உலகப்புகழ் பெற்ற AEC Illuminazione மின்னொளித் தொகுதிகள், Transrail கட்டமைப்புகள் மற்றும் உள்நாட்டு தயாரிப்பான DIMO Lumin மின்சார பெனல்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச தொழில்நுட்பத்தை உள்நாட்டு பொறியியல் திறமையுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கும் DIMO நிறுவனத்தின் திறனுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். 

DIMO நிறுவனத்தின் Lighting Solutions குழுவினர் இந்தத் திட்டத்தின் முழு செயற்பாடுகளையும் கையாண்டுள்ளதோடு, நான்கு மாத காலத்திற்குள் இத்திட்டத்தை நிறைவு செய்துள்ளதோடு, ICC ஆடவர் T20 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்பாகவே மைதானத்தை தயார் செய்யவும் அவர்களால் முடிந்துள்ளது. 

நிறுவலுக்குப் பின்னரான, இந்தத் தொகுதியின் நீண்டகால செயற்பாட்டை உறுதி செய்வதற்காக விற்பனைக்குப் பிந்தைய முழுமையான சேவைத் திட்டத்தை, DIMO நிறுவனம் நடைமுறைப்படுத்தியுள்ளது. 

வணிக ரீதியான மற்றும் தேசிய மட்டத்திலான சிக்கலான உட்கட்டமைப்புத் திட்டங்களை, திட்டமிடுவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும், நீண்ட காலத்திற்கு அவற்றை முன்னெடுத்துச் செல்வதிலும் தனக்குள்ள திறமையை DIMO நிறுவனம் இதன் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05