Feb 5, 2026 - 12:45 PM -
0
இலங்கையின் புகழ்பெற்ற திறந்தவெளி கலைச் சந்தையான கலா பொல, 33 ஆவது வருடமாகவும் பெப்ரவரி 8 ஆம் திகதி கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 7 (கிறீன் பாத்) இல் முன்னெடுக்கப்படவுள்ளது. வண்ணமயமான, கலைப்படைப்புகளை கொண்டதாக அமைந்திருக்கும் இந்நிகழ்வில் இலங்கையின் ஆக்கக் கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்படும்.
1993 ஆம் ஆண்டில் George Keyt அறக்கட்டளையினால் அறிமுகம் செய்யப்பட்டு, 1994 ஆம் ஆண்டு முதல் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் கலா பொல, இலங்கையில் கட்புலக் கலைகள் காட்சிப்படுத்தப்படும் மற்றும் அனுபவிக்கப்படும் விதத்தை மீள்வடிவமைக்கின்ற ஒரு கலாசார அடையாளமாக வளர்ச்சியடைந்துள்ளது. தனது ஸ்தாபக கொள்கைக்கு உண்மையாக நடக்கும் இவ்விழாவானது, எவ்வித தணிக்கையுமின்றி (uncurated) பெருமையுடன் நடத்தப்படுவதுடன், இதில் பங்குபற்றும் ஓவியர்களுக்கும் சிற்பக்கலைஞர்களுக்கும் தமது திறமைகளை வெளிப்படுத்தவும், கலை ஆர்வலர்களுடன் இணையவும், ஏனைய கலைஞர்களுடன் கலந்துரையாடி அறிவைப் பகிர்ந்துகொள்ளவும் மற்றும் தமது வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுபடுத்திக்கொள்ளவும் ஒரு சிறந்த வாய்ப்பினை வழங்குகின்றது.
கலா பொல, நுணுக்கமான சிற்பங்கள், நகைச்சுவைச் சித்திரங்கள் (caricatures) மற்றும் அருவக் கலை (abstract) ஓவியங்கள் முதல் நவீன மற்றும் பாரம்பரிய இலங்கை கலைவடிவங்கள் வரை பல்வேறுபட்ட அம்சங்களை வெளிப்படுத்துகின்றது. நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் வருகைதரும் கலைப்பிரியர்கள், கலைப்பொருள் சேகரிப்பாளர்கள், விசேட தேர்ச்சியுடையோர் மற்றும் மாணவர்கள் மாத்திரமன்றி, உலகெங்கிலும் இருந்தும் வருகைதரும் சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்கும் இந்நிகழ்வில், இசை, கலைக்கலந்துரையாடல்கள், சிறுவர்களுக்கான கலைப் பயிலரங்குகள் மற்றும் பல்வேறு கலாசார கலைநிகழ்வுகள் உள்ளடக்கப்பட்டு, ஒரு விறுவிறுப்பான, வரவேற்புமிக்க மற்றும் முழுமையானதொரு சூழலை உருவாக்கப்படுகிறது.
இலங்கையின் விறுவிறுப்பான கலை மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கிடையில், நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் ஒரு முக்கியத்துவமிக்க கட்புலக் கலை நிகழ்வாகக் கருதப்படும் கலா பொல, காட்சி வெளிப்பாட்டிற்கான ஒரு தனித்துவமான திறந்தவெளித் தளமாகத் தொடர்ந்து விளங்குகின்றது. கொழும்பின் மையப்பகுதியில், அனுபவம் வாய்ந்த மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களை எவ்வித பாகுபாடுமற்ற மற்றும் தணிக்கையுமற்ற ஒரு சூழலில் ஒன்றிணைப்பதன் ஊடாக, படைப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே அர்த்தமுள்ள தொடர்புகளை இவ்விழா ஏற்படுத்துகின்றது. அத்துடன், பொதுமக்களின் பல்வேறு தரப்பினருக்கும் கலைக்கான அணுகல், பன்முகத்தன்மை, கலந்துரையாடல்கள் மற்றும் பகிரப்பட்ட கலை ரசனையை வழங்குவதுடன், நாட்டின் படைப்பாற்றல் பொருளாதாரத்திற்கும் (creative economy) இது வலுவூட்டுகின்றது. நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி (NTB) கலா பொல நிகழ்வின் அதிகாரப்பூர்வ வங்கி பங்காளியாகவும் ஆதரவு வழங்குகிறது.
கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட பாரிய பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) இன் சமூகப் பொறுப்புணர்வு (CSR) பிரிவான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் (JKF) நான்கு முக்கிய துறைகளில் ஒன்றான சமூக ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கம் (Social Health and Cohesion) என்பதன் கீழ் கலைத்துறை உள்ளடங்குகின்றது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 7 வெவ்வேறு துறைகளில் 80 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்குவதுடன், 18,000 இற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றது. அத்துடன், LMD சஞ்சிகையினால் கடந்த 20 ஆண்டுகளாக இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் நிறுவனம் என இது தரப்படுத்தப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழுநேர உறுப்பினராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய ஒப்பந்தத்தின் பங்காளராகவும் விளங்கும் JKH, தனது எதிர்காலத்திற்கான தேசத்தை கட்டியெழுப்புதல் (Empowering the Nation for tomorrow) எனும் சமூகப் பொறுப்புணர்வு நோக்கை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையினூடாக முன்னெடுத்து வருகின்றது.
George Keyt அறக்கட்டளை பற்றி
George Keyt இன் நண்பர்கள் குழுவொன்றினால் 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட George Keyt அறக்கட்டளை, இலங்கையின் கலை மற்றும் கலைஞர்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதையும், கலையை மேம்படுத்துவதையும் மற்றும் இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. இது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் கலைத்துறையை ஊக்குவிக்கும் ஒரு முதன்மையான அமைப்பாக திகழ்கிறது.
மேலதிக தகவல்களுக்கு, பார்வையிடுங்கள் www.kalapola.lk.

