இந்தியா
அபராதம் விதிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை!

Feb 6, 2026 - 11:22 AM -

0

அபராதம் விதிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை!

நடிகர் விஜய் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த 2015 ஆம் ஆண்டு வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில், கடந்த 2015 - 2016 ஆம் நிதியாண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91,890 ரூபாய் (இந்திய மதிப்பில்) என்று விஜய் கணக்கு காட்டியிருந்தார். 

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், 2015 ஆம் ஆண்டு கைப்பற்றிய ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது, புலி திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெற்ற 15 கோடி ரூபாவை (இந்திய மதிப்பில்) கணக்கில் காட்டவில்லை என்று கண்டுபிடித்தனர். இவ்வாறு வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு ரூ.1 கோடியே 50 லட்சத்தை (இந்திய மதிப்பில்) அபராதம் விதித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. 

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நடந்தது. அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார். 

இந்தநிலையில், ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கு தொடர்பாக நீதிபதி கூறுகையில், அபராதம் விதிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை. விதிகளுக்கு உட்பட்டு தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

இதற்கிடையே, நீதிபதி உத்தரவை வாசித்த பின்னர் விஜய் தரப்பினர் தீர்ப்பாயத்தை அணுக அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற நீதிபதி, அபராதத்தை ரத்து செய்வது தொடர்பாக தீர்ப்பாயத்தை அணுக அனுமதி வழங்கினார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05