வணிகம்
Mark and Comm இனால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது வர்த்தக சமூக மதிநுட்ப மாநாட்டில் இலங்கையின் சந்தைப்படுத்தல் துறை முன்னோ

Feb 6, 2026 - 02:49 PM -

0

Mark and Comm இனால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது வர்த்தக சமூக மதிநுட்ப மாநாட்டில் இலங்கையின் சந்தைப்படுத்தல் துறை முன்னோ

இலங்கையின் முன்னணி மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் நிறுவனமான Mark and Comm (Pvt) Ltd, உலகத்தரம் வாய்ந்த இருபெரும் தொழில்நுட்பத் தளங்களான Hootsuite மற்றும் Talkwalker ஆகியவற்றை இலங்கையில் முதல்முறையாக உத்தியோகபூர்வமாக ஒன்றிணைத்து சந்தைப்படுத்தல் சார்ந்த மாநாடு ஒன்றை முன்னெடுத்திருந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி கொழும்பு NH Collection ஹோட்டலில் நடைபெற்றது. நாட்டின் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 100 சிரேஷ்ட சந்தைப்படுத்தல் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். நுகர்வோர் உரையாடல்களை வர்த்தகநாமங்கள் எவ்வாறு ஆழமாகப் புரிந்துகொள்வது மற்றும் அதற்கேற்ப எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த புதிய பரிமாணங்களை இம்மாநாடு அறிமுகப்படுத்தியது. 

“Brands: Listen, Learn and Lead” எனும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வு, இலங்கையின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையின் முதிர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. இலங்கையில் தற்போது 12 மில்லியன் செயலில் உள்ள இணையப் பயனாளர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான உரையாடல்களை உருவாக்கி வருகின்ற போதிலும், பெரும்பாலான வர்த்தகநாமங்கள் அந்த உரையாடல்களைக் கண்டறிவதற்கு அல்லது உள்வாங்கத் தவறிவிடுகின்றன. 

அழைக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இந்த விசேட ஒன்றுகூடலானது, சமூக ஊடக உரையாடல்களைக் காத்திரமான வணிக நுண்ணறிவுகளாக (Business Intelligence) மாற்றுவதன் மூலம் சந்தையில் நிலவும் பாரிய இடைவெளியை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டமைந்திருந்தது. 

நீங்கள் அவதானித்துக் கொண்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் வர்த்தகநாமம் பற்றிய உரையாடல்கள் தற்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன, என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான Hootsuite மற்றும் Talkwalker நிறுவனங்களின் பிரத்தியேக விநியோகஸ்தரான Mark and Comm நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தன்சில் தாஜுதீன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சமூக ஊடகங்களில் வெளிப்படும் இவ்வாறான சமிக்ஞைகளை உடனுக்குடன் கண்டறிந்து, அவற்றின் பொருளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப துரிதமாகச் செயற்படும் திறனே, முன்னணியில் உள்ள வர்த்தகநாமங்களை ஏனையவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. என்றார். 

Talkwalker நிறுவனத்தின் வளர்ந்து வரும் சந்தைகளுக்கான வாடிக்கையாளர் வளர்ச்சி மற்றும் புத்தாக்கப் பணிப்பாளர் ஏஞ்சல் கலினிசன், வெறும் தகவல்களைக் கண்காணிக்கும் நிலையிலிருந்து, Predictive Intelligence நோக்கி எவ்வாறு முன்னேறுவது என்பது குறித்து விளக்கமளித்தார். Talkwalker நிறுவனத்தின் AI மூலம் இயங்கும் தளமானது, டிஜிட்டல் உலகில் தேவையற்ற Digital Noise மத்தியில் முக்கியமான சந்தைச் சமிக்ஞைகளை எவ்வாறு பிரித்தறிகின்றது என்பதையும், அவை நிறுவனத்தின் செயற்திறனைப் பாதிக்கும் முன்னரே மக்களின் மனநிலை மாற்றங்களைக் கண்டறிவது எப்படி என்பதையும் அவர் தனது உரையில் விவரித்தார். சர்வதேச முன்னணி நிறுவனங்களின் அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டு அவர் முன்வைத்த புள்ளிவிபரங்கள் பாராட்டக்கூடிய முடிவுகளைக் காட்டின. தவறான தகவல்கள் பரவுவதை 75 சதவீதத்தினால் குறைத்தல், நெருக்கடி காலங்களில் 50 சதவீதம் விரைவான பதிலளிப்பு மற்றும் தரவுகளிலிருந்து நுண்ணறிவுகளைப் பெற்றுக்கொள்ளும் வேகத்தில் 35 சதவீத அதிகரிப்பு ஆகியவற்றை அந்த நிறுவனங்கள் அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

Hootsuite நிறுவனத்தின் மூலோபாய வர்த்தகக் கணக்கு நிறைவேற்று அதிகாரி அனுபவ் கன்துஜா, AI என்பது வெறும் உள்ளடக்கங்களை உருவாக்கும் கருவி என்ற நிலையிலிருந்து, அது ஒரு Intelligent teammate என்ற நிலைக்கு எவ்வாறு மாறியுள்ளது என்பது குறித்து உரையாற்றினார். அவர் தனது உரையில் 2026 ஆம் ஆண்டிற்கான முக்கியமான போக்குகளை வெளிப்படுத்தியிருந்தார். பல்வேறு சமூக ஊடகத் தளங்களின் கலாசாரத் தனித்துவத்தைப் பேணிப் பாதுகாக்கும் அதேவேளை, அவை அனைத்தையும் ஒரே இடத்தில் எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அவர் செயல்முறை விளக்கமளித்தார். அத்துடன், முதலீட்டிற்கான வருவாயை (ROI) அளவிடுவதற்கான கட்டமைப்பு முறைகளையும் அவர் இதன்போது பகிர்ந்து கொண்டார். 

அமர்வினைத் தொடர்ந்து, From Insights to Impact: Building Data-Driven Brands in Sri Lanka எனும் தலைப்பில் 45 நிமிடக் குழுநிலை விவாதம் நடைபெற்றது. தன்சில் தாஜுதீனின் நெறியாள்கையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஏஞ்சல் கலினிசன் மற்றும் அனுபவ் கன்துஜா ஆகியோருடன், DAT – The AI Company நிறுவனத்தின் இணை நிறுவனர் முஹம்மது கஸாலி மற்றும் ஆசிய பசிபிக் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (APIDM) இணை நிறுவனரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அமித அமரசிங்க ஆகியோரும் இணைந்து கொண்டனர். 

இலங்கையின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரிகளுக்கும் (CMOs) நிறுவனங்களுக்கும் தற்காலத்தில் எழும் சவாலான கேள்விகள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, சந்தை மாற்றங்கள் நிகழ்ந்த பின்னர் அவற்றிற்கு எதிர்வினை ஆற்றுவதற்குப் பதிலாக, AI மூலமான கண்காணிப்பைப் பயன்படுத்தி அவற்றை முன்கூட்டியே கணித்தல், நிறுவனத்தின் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் தீவிரமடைவதற்கு முன்னரே அவற்றை இனங்காணல் மற்றும் வெறும் மேலோட்டமான தரவுகளைத் (Vanity metrics) தவிர்ந்து நிறுவனத்தின் வருவாயில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவீடுகளை அடையாளம் காணுதல் போன்றவை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், AI இன் வினைத்திறனுக்கும் மனிதப் படைப்பாற்றலுக்கும் இடையில் எவ்வாறு சமநிலையைப் பேணுவது மற்றும் சமூக ஊடகங்களுக்காகச் செய்யப்படும் முதலீடுகளுக்கான வருவாயை எவ்வாறு நிரூபிப்பது போன்ற விடயங்களும் முக்கியமாக வலியுறுத்தப்பட்டன. 

இந்தக் கலந்துரையாடலானது இலங்கைக்கு உரித்தான சவால்கள் குறித்தும் விரிவாக ஆராய்ந்தது. தரவுகள் இருந்தும் அவற்றைச் சரியாகப் பயன்படுத்த முடியாமைக்கான தடையாக இருப்பது தொழில்நுட்பமா, திறமையா அல்லது நிறுவனக் கலாசாரமா என்பது குறித்து முஹம்மது கஸாலி விளக்கமளித்தார். அதேவேளை, சந்தையில் காணப்படும் திறன் இடைவெளிகள் மற்றும் வெறும் டிஜிட்டல் செயற்பாட்டாளர்களுக்கும் மூலோபாய வியூக வகுப்பாளர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்து அமித அமரசிங்க தெளிவுபடுத்தினார். அத்துடன், கலாசாரத் தனித்துவத்தைப் பேணியவாறு AI மூலம் பெருமளவிலான உள்ளடக்கங்களை உருவாக்குவதில் உள்ள சமநிலை மற்றும் இலங்கையில் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத ஒரு பலமான உத்தியாகக் கருதப்படும் Employee advocacy குறித்தும் இக்குழு விரிவாகக் கலந்துரையாடியது. 

சமூக ஊடகக் கண்காணிப்பை (Social listening) வினைத்திறனாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள், தமது போட்டியாளர்களை விட 10 சதவீதம் வேகமான வருவாய் வளர்ச்சியை அடைகின்றன என ஆய்வுகள் காட்டுகின்றன; இருப்பினும், இலங்கையின் பல வர்த்தகநாமங்கள் இன்னும் ஒருங்கிணைக்கப்படாத கருவிகளையும், நெருக்கடிகள் ஏற்பட்ட பின்னர் அவற்றுக்குத் தீர்வுகாணும் முறைகளையுமே நம்பியிருக்கின்றன. 

இந்த ஆண்டு தனது 15ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Mark and Comm நிறுவனம், அண்மையில் நடைபெற்ற Campaign’s 2025 விருது வழங்கல் நிகழ்வில் Rest of South Asia PR Agency of the Year எனும் விருதினையும் வென்றெடுத்தது. இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளுக்கான Hootsuite மற்றும் Talkwalker ஆகிய உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத் தளங்களின் பிரத்தியேகப் பங்காளராகச் செயற்படுகின்றது. உலகளவில் 25 மில்லியனுக்கும் அதிகமான தொழில் வல்லுநர்களாலும், Fortune 1000 பட்டியலில் உள்ள 800 நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படும் Hootsuite, சமூக ஊடக முகாமைத்துவ, பகுப்பாய்வு மற்றும் தொகுப்புகளுக்கான முதன்மைத் தளமாக G2 நிறுவனத்தினால் அண்மையில் தரப்படுத்தப்பட்டது. அதேவேளை, Talkwalker நிறுவனத்தின் AI மூலம் இயங்கும் தளமானது, 187 மொழிகளில் 150 மில்லியன் தகவல் மூலங்களைக் கண்காணிக்கின்றது. இவ்விரு தளங்களும் ஒன்றிணைந்து, சமூக ஊடகங்களில் நுகர்வோர் கருத்துக்களுக்குச் செவிமடுப்பதிலிருந்து வர்த்தகநாமங்களின் பதிலளிப்புகளை முகாமைத்துவம் செய்வது வரை அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு முழுமையான தீர்வை வழங்குகின்றன. 

இந்த நிகழ்வுகள், என்ன நடந்தது? என்ற நிலையிலிருந்து இனி என்ன நடக்கப்போகிறது? என்ற அடிப்படை மாற்றத்தை நோக்கிய நகர்வை அடையாளப்படுத்துகின்றன, என தாஜுதீன் விளக்கமளித்தார். வெறும் தரவுகளைக் கடந்து, நுண்ணறிவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் திறனே இன்றைய சந்தை முன்னோடிகளை தீர்மானிக்கின்றது. 

வங்கித்துறை, தொலைத்தொடர்பு, FMCG, சில்லறை விற்பனை, விருந்தோம்பல் மற்றும் ஊடகத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரிகள் (CMOs), சந்தைப்படுத்தல் பணிப்பாளர்கள், வர்த்தகநாம முகாமையாளர்கள் மற்றும் தொடர்பாடல் தலைவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் ஒன்றிணைந்திருந்தனர். இது இலங்கையின் சந்தைப்படுத்தல் துறைத் தலைவர்கள் அண்மைக்காலத்தில் ஒரே இடத்தில் ஒன்றுதிரண்ட மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது. நாங்கள் அறிமுகப்படுத்தியது வெறும் மேம்பட்ட சமூக ஊடகக் கண்காணிப்பு முறையை மாத்திரமல்ல, எனத் தெரிவித்த தாஜுதீன், நியூயோர்க், சிங்கப்பூர் அல்லது லண்டன் போன்ற நகரங்களில் முடிவெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் அதே நுண்ணறிவுத் திறன்களைக் கொண்டு, இலங்கை வர்த்தகநாமங்களும் உலகளவில் போட்டியிடுவதற்கான வலுவூட்டலையே நாங்கள் மேற்கொண்டுள்ளோம். என மேலும் குறிப்பிட்டார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05