Feb 6, 2026 - 02:57 PM -
0
ஜோசப் பிரேசர் (Joseph Fraser) வைத்தியசாலை, மருத்துவ ரீதியாக வழிநடத்தப்பட்ட நீர் மூலமான பிரசவத்தின் (water birth) ஊடாக தமது மகப்பேற்றுச் சேவையில் அண்மையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு, தாயின் விருப்பத்திற்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் மருத்துவப் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரநிலைகளை உறுதிப்படுத்துவதில் மருத்துவமனை கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஜோசப் பிரேசர் மருத்துவமனையினால் வழங்கப்படும் நீர் மூலமான பிரசவங்கள், மிக நெருக்கமான மருத்துவக் கண்காணிப்பிற்கு உட்பட்ட சூழலில், இறுக்கமான மருத்துவ விதிமுறைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பிரசவமும் மருத்துவமனையிலுள்ள மேம்படுத்தப்பட்ட, சிசுக்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு (NICU), இரத்த வங்கி, அதிதீவிர கண்காணிப்புப் பிரிவு (HDU) ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இடம்பெறுகின்றன. இது, தேவையைப் பொறுத்து, தாய் மற்றும் சேய்க்கு உடனடி நிபுணத்துவ சிகிச்சையை வழங்குவதை உறுதி செய்கிறது.
இது தொடர்பான முதலாவது பிரசவமானது, இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் ஹேமந்த சேனநாயக்கவின் மேற்பார்வையில் இடம்பெற்றது. அவர் enhanced perineal support (மேம்படுத்தப்பட்ட பெரினியல் ஆதரவு) உள்ளிட்ட மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை இதில் இணைத்திருந்தார். இது தாய்க்கு அமைதியானதும் தன்னம்பிக்கை அளிக்கும் பிரசவ அனுபவத்தை வழங்கியதோடு, சிறந்த மருத்துவப் பெறுபேறுகளைப் பெறவும் பங்களிப்புச் செய்தது.
மருத்துவமனையின் 104 ஆண்டுகால மகப்பேற்று பராமரிப்பு வரலாற்றில் இந்த மைல்கல்லானது, ஒரு சிறப்பான முக்கியத்துவத்தையும் பதிவு செய்துள்ளது. தலைமுறைகளை கடந்த ஒரு அரிய நிகழ்வாக, மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் குறித்த பெண்ணை பிரசவிக்கச் செய்த அதே மருத்துவக் குழுவினரே, ஜோசப் பிரேசர் மருத்துவமனையில் அவரது குழந்தையின் பிரசவத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
தனிப்பயனாக்கப்பட்ட சேவையே மருத்துவமனையின் மகப்பேற்று தத்துவத்தின் மையமாக விளங்குகின்றது. அதன் பிரத்தியேக BirthX எனும் பிரசவத்திற்கு முந்தைய ஆலோசனை திட்டத்தின் மூலம், கர்ப்பிணித் தாய்மார்களின் விருப்பங்கள் மற்றும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள அவர்களுடன் இணைந்து மருத்துவர்கள் நெருக்கமாக பணியாற்றுகிறார்கள். அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே தாய்மார்கள் மற்றும் அவர்களது கணவன்மார்களுக்காகத் தனிப்பயனாக்கப்பட்ட பிரசவத் திட்டத்தை உத்தியோகபூர்வமாகத் தயாரிக்கும் கொழும்பில் உள்ள ஒரேயொரு மருத்துவமனை ஜோசப் பிரேசர் மருத்துவமனையாகும்.
இந்தச் சாதனை குறித்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் ஹேமந்த சேனநாயக்க, கருத்து வெளியிடுகையில், முறையான மருத்துவக் கண்காணிப்பின் கீழ், நீர் மூலமான பிரசவமானது பெண்களுக்கு ஒரு வலிமையான மற்றும் மிகவும் தனிப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது என்றார். மருத்துவமனையின் மருத்துவச் சேவைகளின் தலைவர் வைத்தியர் தில்ருக்ஷி சய்யக்ரா தெரிவிக்கையில், மருத்துவமனையின் அணுகுமுறையானது தாய் அல்லது சிசுவின் பாதுகாப்பில் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி, தெளிவான மற்றும் நெகிழ்வான பிரசவ தெரிவுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது என்றார்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலான அனுபவம், நிபுணர்கள் தலைமையிலான சேவைகள் மற்றும் நைன்வெல்ஸ் நிர்வாகத்தின் கீழ் 24 மணிநேரமும் இயங்கும் மேம்படுத்தப்பட்ட NICU வசதியுடன், ஜோசப் பிரேசர் மருத்துவமனையானது ஒரு நம்பகமான மகப்பேற்று வைத்தியாலையாக தனது நற்பெயரை தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது. தேசிய சுகாதார சேவைக்கு அது ஆற்றி வரும் பங்களிப்பிற்கு சான்றாகும் வகையில், அரசாங்கத்தினால் நினைவுத் தபால் முத்திரை வெளியிடப்பட்டு, கௌரவிக்கப்பட்ட இலங்கையின் ஒரேயொரு தனியார் மருத்துவமனையாக இது திகழ்கிறது.

