Feb 6, 2026 - 05:09 PM -
0
பாகிஸ்தான் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 169 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் குண்டுவெடிப்பு ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும், இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்லாமாபாத் பொலிஸாரை மேற்கோள் காட்டி அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மீட்புப் பணியாளர்களும் நேரில் கண்டவர்களும் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொலிஸார் மற்றும் பொதுமக்களால் அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ஷியா வழிபாட்டாளர்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்குக் காரணமான பாகிஸ்தான் தலிபான் அல்லது ஐஎஸ் போன்ற தீவிரவாதக் குழுக்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் முழுவதும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமாபாத்தில் இவ்வாறான தாக்குதல்கள் அரிதாகவே இடம்பெறுகின்றன என்றாலும், சமீபத்திய மாதங்களில் பாகிஸ்தானில் தீவிரவாத வன்முறைகள் அதிகரித்துள்ளன.
இவை முக்கியமாக பலூச் பிரிவினைவாதக் குழுக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் தொடர்புடைய 'தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்' (TTP) அமைப்பினால் முன்னெடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.
அத்துடன் ஐஎஸ் அமைப்பின் பிராந்தியக் கிளையொன்றும் நாட்டில் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

