Feb 7, 2026 - 05:05 PM -
0
மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவுள்ள டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு மதுவரித் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் தமது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான இணக்கப்பாடு கடந்த 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்டதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரச வருமான நிர்வாக சீர்திருத்த மற்றும் நவீனமயமாக்கல் பணியகத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
மதுவரித் திணைக்களத்தின் வினைத்திறனை அதிகரிப்பதன் மூலம் வருமான சேகரிப்பை மேம்படுத்துவதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக அமைந்தது.
அதற்காகத் தேவையான டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறை, புதிய சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக வினைத்திறனை மேம்படுத்தல், மனித வள அபிவிருத்தி மற்றும் உத்தியோகத்தர்களின் நலன்புரி விடயங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மதுவரித் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

