செய்திகள்
எப்ஸ்டீன் ஆவணங்களில் இலங்கை குறித்து 182 இடங்களில் குறிப்பு

Feb 7, 2026 - 10:20 PM -

0

எப்ஸ்டீன் ஆவணங்களில் இலங்கை குறித்து 182 இடங்களில் குறிப்பு

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளியான அமெரிக்கப் பிரஜை எப்ஸ்டீன் பற்றி அந்நாட்டில் வெளியிடப்பட்ட புதிய ஆவணத் தொகுப்பில், இலங்கை பற்றி 182 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், அவர் இந்நாட்டிற்குள் ஏதேனும் தவறுகளை இழைத்துள்ளதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

 

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்காவில் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனின் வழக்குக்குரிய மில்லியன் கணக்கான புதிய ஆவணங்கள் அமெரிக்க நீதித் திணைக்களத்தினால் கடந்த வாரம் வெளியிடப்பட்டன.

 

அதனுடன், இதுவரை வெளியாகி உள்ள, எப்ஸ்டீனுடன் தொடர்புகளைப் பேணிய உலகின் மிகவும் செல்வந்த மற்றும் அதிகாரம் மிக்க நபர்களின் பெயர் பட்டியல் மேலும் நீண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

 

"எப்ஸ்டீன் கோப்புகள்" (Epstein Files) என அழைக்கப்படும் இந்த ஆவணங்களின் புதிய வெளியீடு கடந்த ஜனவரி 30 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், அதில் 3 மில்லியன் பக்கங்கள், 180,000 புகைப்படங்கள் மற்றும் 2,000 வீடியோக்கள் அடங்கியுள்ளன.

 

அத்துடன் பில்லியனர்களான ரிச்சர்ட் பிரான்சன், பில் கேட்ஸ், எலான் மஸ்க் இலங்கையைச் சேர்ந்த போன்ற உலகப் புகழ் பெற்ற நபர்களின் பெயர்கள் சிலவும் இதில் அடங்கியுள்ளன. அந்த ஆவணங்களில் அவர்களின் பெயர்கள் உள்ளடங்கியுள்ளமையால் மாத்திரம் அவர்கள் ஏதேனும் தவறு செய்துள்ளார்கள் என்று அர்த்தப்படாது.

 

இவ்வாறான பின்னணியில் எப்ஸ்டீன் கோப்புகளில் இலங்கை பற்றி 182 சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது 'லிட்டில் செய்ன்ட் ஜேம்ஸ்' (Little St. James) அல்லது அவரது ரகசியத் தீவை நிர்மாணிப்பதற்காக, உலகப் புகழ் பெற்ற இலங்கைக் கட்டடக் கலைஞர் ஜெப்ரி பாவாவின் ஒப்பிடமுடியாத கட்டட வடிவமைப்புப் பாணியின் தாக்கத்தைப் பெற முயற்சி செய்துள்ளார் என்பதாகும்.

 

நீதிமன்றத்தின் முன்னிலையில் வெளியான மின்னஞ்சல் செய்திகளுக்கு அமைய, எப்ஸ்டீனின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான ஜூலியன் லீஸ் என்பவரால் ஜெப்ரி பாவாவின் விசேட கட்டட வடிவமைப்புகளின் புகைப்படங்கள் அடங்கிய மின்னஞ்சல் ஒன்று அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

இயற்கைக்கும் கட்டடங்களுக்கும் இடையில் ஓர் அபூர்வ இணைப்பை ஏற்படுத்தும் பாவாவின் வடிவமைப்புப் பாணியை, தமது தீவினுள் மீள் உருவாக்கம் செய்வது பற்றி அவர்கள் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஜூலியன் லீஸ் என்பவர் 80-90 தசாப்தங்களில் பிரபல பிரித்தானிய ஆயுத வியாபாரியாக இருந்த டக்ளஸ் லீஸின் புதல்வர் ஆவார்.

 

எப்ஸ்டீனின் ஆவணங்களில் ஜூலியனின் பெயர் வெறும் நண்பராக மாத்திரம் குறிப்பிடப்படாமல், எப்ஸ்டீனுடன் வர்த்தகக் கலந்துரையாடல்களை மேற்கொண்ட மிக நெருங்கிய பங்காளியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஜூலியன் லீஸ் நீண்ட காலமாக இலங்கையைத் தனது வசிப்பிடமாகக் கொண்டிருந்தார் என்பதும் அந்த அறிக்கைகளைப் பரிசோதிக்கும் போது தெரியவருகிறது.

 

எவ்வாறாயினும் எப்ஸ்டீன் மற்றும் ஜூலியன் லீஸ் இந்நாட்டினுள் எந்தவொரு குற்றச் செயல்களையும் செய்துள்ளதாகக் குறித்த அறிக்கைகளில் இல்லை என்பதுடன், அது பற்றி இந்நாட்டுப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் தெரியவரவில்லை.

Comments
0

MOST READ
01
02
03
04
05