Feb 9, 2026 - 09:01 AM -
0
இந்தியாவின் குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவனை கேள்விகேட்ட ஆசிரியருக்கு அறைவிழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷெஹ்ரா நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கடந்த ஜனவரி 24 ஆம் திகதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
முகமது கான் (18 வயது) என்ற மாணவன் பரீட்சைக்கு தாமதமாக வந்துள்ளார். அப்போது தேர்வறையில் இருந்த ஆசிரியர் மாணவனிடம் தாமதத்திற்கான காரணத்தைக் கேட்டபோது, "என்னை வீட்டிலேயே யாரும் கேட்பதில்லை, நீ யார் கேட்க?" என திமிராக பதிலளித்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அப்போதே ஆசிரியரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவத்தன்று மாணவனின் தந்தை ஆசிரியரிடமும், பாடசாலை ஆசிரியரிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தனது தந்தையுடன் 15 - 20 பேரைக் கூட்டிக்கொண்டு பாடசாலைக்கு வந்த அந்த மாணவர், தனியாக வசிக்கும் அந்த ஆசிரியையை மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மிரட்டலை தொடர்ந்து ஆசிரியரின் புகாரின் அடிப்படையில், கடந்த 03 ஆம் திகதி ஷெஹ்ரா பொலிஸ் நிலையத்தில் மாணவர்,
பாடசாலை சிசிடிவி காட்சிகளில் அடையாளம் தெரிந்த நான்கு பேர் மற்றும் 15 முதல் 20 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
இதுவரை மூன்று குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடந்த 06 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் ஆசிரியர்களிடையே பெரும் சீற்றத்தை தூண்ட சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் இதுபோன்ற செயல்களை ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

