Feb 9, 2026 - 12:01 PM -
0
செலிங்கோ லைஃப் நிறுவனமானது, துறைசார் அனுபவம் கொண்ட சிரேஷ்ட நிபுணர் கலாநிதி கெலும் சேனநாயக்க அவர்களை ஆலோசகராக (Consultant) நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், நிறுவனமானது திறன் அபிவிருத்தி, பயிற்சி சிறப்புத் தரம், தயாரிப்பு புதுமை மற்றும் செயல்பாட்டு ஒழுங்குமுறை ஆகியவற்றில் நிறுவனத்தின் மூலோபாய கவனத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
தனது புதிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ள, கலாநிதி சேனநாயக்க பெரும்பாலும் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் பயிற்சி செயல்பாட்டை மேற்பார்வையிடுவார். நிறுவனத்தின் பயிற்சி குழுவுடன் நெருக்கமாக இணைந்து, வழங்கப்படும் பயிற்சியின் தரம், பொருத்தம் மற்றும் செயல்திறனை தொடர்ந்து மேம்படுத்தும் நோக்கில் வழிகாட்டல், மற்றும் புதிய நோக்கத்தையும் வழங்கவுள்ளார். மேலும், காப்புறுதி சேவை முழுவதிலும் உள்ள அவரது விரிவான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, தேவையான நேரங்களில் புதியதிட்ட வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கும் ஆதரவளிப்பார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
காப்புறுதித் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட கலாநிதி சேனநாயக்க, மூலோபாயத் தலைமைத்துவம் மற்றும் செயல்பாட்டு நிபுணத்துவத்தில் நிரூபிக்கப்பட்ட சாதனை வரலாற்றை செலிங்கோ லைஃப் நிறுவனத்திற்கு வழங்கவுள்ளார். இலங்கை காப்புறுதித்துறையில் மிகவும் மதிப்பு மிக்க மில்லியன் டொலர் வட்ட மேசை (MDRT) அந்தஸ்தை வெறும் 133 நாட்களில் பெற்ற முதல் மற்றும் ஒரே பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) என்ற தனித்துவமான பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
கலாநிதி சேனநாயக்க முன்னதாக ஆர்பிகோ இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிறைவேற்றுப்பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) மற்றும் பிரதம அதிகாரி ஆகிய பதவிகளை வகித்துள்ளார். மேலும் Richard Peiris Distributors மற்றும் Richard Peiris Finance Company ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் குழுக்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். அவர் தனது தொழில் வாழ்க்கையை 1982 ஆம் ஆண்டு, தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முதன்மை முகவராக செயல்பட்ட Mercantile Credit Ltd நிறுவனத்தில் தொடங்கினார். அதன் பின்னர் யூனியன் அசூரன்ஸ் நிறுவனத்தில் இணைந்து, 27 ஆண்டுகளுக்கும் மேலான தனது பணிக்காலத்தில் உதவி பொது முகாமையாளர் பதவி வரை உயர்ந்தார். அதன் பின், AIA இன்சூரன்ஸ் லங்கா நிறுவனத்தில் பொது முகாமையாளர் – செயல்பாடுகள் என்ற பதவியில் இணைந்த அவர், ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப்பகுதியில் பணிப்பாளர் – செயல்பாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தார்.
தன் தொழில்முறை வாழ்க்கை முழுவதிலும், கலாநிதி சேனநாயக்க, Munich Re, Hannover Re மற்றும் Reinsurance Group of America (RGA) உள்ளிட்ட உலகின் முன்னணி மீள் காப்புறுதி நிறுவனங்களுடன் வலுவான பணிப்புரிதல் உறவுகளை உருவாக்கியுள்ளார். புதிய காப்புறுதி underwriting, காப்புறுதிதாரர் சேவை, குழு காப்புறுதி underwriting, கோரிக்கை செலுத்துதல் புதிய காப்புறுதி திட்ட அறிமுகம், மீள்காப்புறுதி, தொடர்பு நிலையங்கள், வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் பிற முக்கிய செயல்பாட்டு துறைகளை ஒழுங்குபடுத்தும் செயல்முறைகளை உருவாக்கி நிர்வகிப்பதில் அவர் பல தசாப்தங்களாக செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், மூலோபாய ரீதியான பார்வையும் நேரடி செயல்பாட்டு அனுபவமும் ஒருங்கிணைந்த அபூர்வமான ஆழமான அறிவைப் பெற்றவராக அவர் திகழ்கிறார்.
கொழும்பு ஆனந்தா கல்லூரி முன்னாள் மாணவரான கலாநிதி சேனநாயக்க, Worldview Institute- இல் இருந்து வர்த்தக முகாமைத்துவ டிப்ளோமாவையும், அவுஸ்திரேலியாவின் University of Western Sydney-யில் இருந்து MBA பட்டத்தையும் பெற்றுள்ளார். காப்புறுதித் துறையில் அவர் செய்த சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், London University of Peace அவருக்கு Doctor of Business Administration பட்டத்தை வழங்கியுள்ளது. மேலும், ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், ஹோங்காங், மலேசியா, தாய்லாந்து, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தொழில்சார் காப்புறுதிப் பயிற்சிகளை பெற்றுள்ள அவர், தனது தொழில்காலத்தில் 20,000-க்கும் மேற்பட்ட காப்புறுதி நிபுணர்களை பயிற்றுவித்த மதிப்புமிக்க பயிற்றுநராகவும் திகழ்கிறார்.
செலிங்கோ லைஃப் நிறுவனம், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக சந்தை முன்னணியில் இருந்து வருகிறது. காப்புறுதி பெற்றவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளை பாதுகாக்கவும், அபாயங்களை குறைக்கவும் உதவும் புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டில், Brand Finance அமைப்பின் மதிப்பீட்டின்படி,செலிங்கோ லைஃப் நிறுவனம் இலங்கையின் மிக உயர்ந்த மதிப்புள்ள காப்புறுதி வர்த்தகநாமமாகவும், 22-வது மிக பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில், தொடர்ந்து 19-வது தடவையாக ஆண்டின் மக்களுக்கான ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர (“People’s Life Insurance Service Provider of the Year”) விருதைப் பெற்றதன் மூலம், மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரியவர்த்தகநாமம் என்ற தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியது.மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கையின் ஆண்டுக்கான வர்த்தகநாமம் என்ற விருதினை பெற்றுள்ள இந்த நிறுவனம், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் முகாமைத்துவ கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனம் (CIMA) ஆகிய அமைப்புகளால் இலங்கையின் மிகவும் பாராட்டப்பட்ட 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

