Feb 9, 2026 - 05:04 PM -
0
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மறுசீரமைப்புச் செயன்முறையின் போது எழும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பாடசாலை மாணவர் போக்குவரத்தில் நிலவும் பிரச்சினைகளைக் குறைத்து முறையான போக்குவரத்து பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கும், "சிசு செரிய" பாடசாலை போக்குவரத்துச் சேவையை மிகவும் வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்துவதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையை முறைப்படுத்துவது தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (09) முற்பகல் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது இது தொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
பாடசாலை மாணவர் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கான அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்குரிய ஒழுங்குவிதிகளின் வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் உள்வாங்கப்பட வேண்டிய புதிய முன்மொழிவுகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
பாடசாலை மாணவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டவிதிமுறைகளை அறிமுகப்படுத்துதல், சிறுவர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து மாணவர் போக்குவரத்தின் போது பதிவாகும் துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுத்தல், பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுபவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்தி அதனை ஒரு பொறுப்புவாய்ந்த சேவையாக மாற்றுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியன ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

