Feb 10, 2026 - 04:02 PM -
0
எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இப்போட்டியில் கலந்துகொள்ளப்போவதில்லை எனப் பாகிஸ்தான் அரசாங்கம் முன்னர் எடுத்திருந்த முடிவை, இலங்கையின் தலையீட்டின் பின்னர் மாற்றிக்கொண்டமை குறித்து அரசாங்கம் என்ற வகையில் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதில் கிரிக்கெட் விளையாட்டைப் பயன்படுத்தி, நாடுகளுக்கிடையில் நட்புறவையும் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புவதற்கு ஒரு நாடாக இலங்கைக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமாயின், அரசாங்கம் என்ற வகையில் அந்தத் தலையீட்டைத் தயங்காமல் நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ:
"பிராந்தியத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறாத ஒரு சூழ்நிலையே இருந்தது. இதற்காக அரசாங்கம் என்ற வகையிலும் கடந்த சில நாட்களாகப் பல்வேறு தலையீடுகளை மேற்கொண்டோம். அதன் இறுதிப் பெறுபேறாகத் தற்போது இந்தப் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது."
"விசேடமாக இந்த நேரத்தில் ஐ.சி.சி மற்றும் எமது கிரிக்கெட் சபை போன்றே தலையிட்ட பல குழுக்கள் இருந்தன. ஜனாதிபதி அவர்கள் பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசியில் இது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார். இது குறித்துப் பாகிஸ்தான் அரசாங்கமும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது."
"பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டே அனைத்து அணிகளுக்கும் அழைப்பு விடுத்தோம். உச்சக்கட்ட பாதுகாப்பை நாம் வழங்குகிறோம்."
இப்போட்டியைப் பார்வையிட பெருமளவான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதனைக் கருத்தில் கொண்டு பொலிஸார் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

