Feb 10, 2026 - 05:03 PM -
0
2025 நவம்பர் 26 அன்று கோட்டை, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மொனார்க் இம்பீரியல் நிகழ்வு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய கல்வியாளர் விருதுகள் 2025 நிகழ்வில் இலங்கையில் உயர் கல்வி மற்றும் பொதுக் கல்வித் துறைகளில் மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ள கல்வியாளர்களை கௌரவிக்கும் வகையில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எதிர்கால தலைமுறைகளுக்கான கல்வித் தராதரங்களை மேம்படுத்துவதில் அவர்களுடைய அறிவாற்றலும், புத்தாக்கமும் நிறைந்த பங்களிப்புக்கள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் போற்றும் முகமாகவே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான துருக்கி குடியரசின் தூதுவர் கௌரவ திரு. செமி லுட்ஃபு துர்குட் அவர்கள் பிரதம அதிதியாகவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன அவர்கள் கௌரவ அதிதியாகவும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
கல்வித் துறையில் சிறந்த விளைவை ஏற்படுத்தி, மகத்துவத்தை நிலைநாட்டியவர்களுக்கான இனங்காணல் அங்கீகாரத்தை வழங்கும் முகமாக தேசிய கல்வியாளர் விருதுகள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அளவுகோல்களைப் பயன்படுத்தி, கற்பிக்கும் செயல்திறன், அறிவார்ந்த உழைப்பு, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஆற்றியுள்ள பங்களிப்புக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உயர் கல்வித்துறையிலுள்ள கல்வியாளர்களை மதிப்பீடு செய்து, இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரயோக விஞ்ஞானங்கள், தாதியம் மற்றும் சுகாதார விஞ்ஞானங்கள், சமூக விஞ்ஞானங்கள், கணிதம் மற்றும் புள்ளி விபரவியல், உளவியல், பொறியியல், மொழி மற்றும் இலக்கியம், கல்வி, கணினி, சட்டம், வணிகம் மற்றும் முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறுபட்ட துறைகளின் கீழ் 2025 ம் ஆண்டுக்கான அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறந்த பலனை வழங்கும் முறையில் கற்பித்தல், சமூக ஈடுபாடு, மற்றும் கல்வியில் புத்தாக்கம் ஆகியவற்றுடன் தமது செயல்திறனை சிறப்பாகக் காண்பித்துள்ள பொதுக் கல்வித் துறையின் ஆசிரியர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். நாடெங்கிலும் கற்றல் விளைவுகள் மற்றும் சமூகங்களை வலுப்படுத்துவதை வளர்ப்பதில் பாடசாலை ஆசிரியர்களின் முக்கிய பங்கினை இது பிரதிபலிக்கின்றது. உயர் கல்வித் துறையில் 35 விண்ணப்பங்களிலிருந்து பல்வேறுபட்ட துறைகள் மத்தியில் மொத்தமாக 15 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டனர். பொதுக் கல்விப் பிரிவில் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி கிடைக்கப்பெற்ற 166 விண்ணப்பங்களிலிருந்து 25 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். மாகாண மட்டத்திலான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் முகமாக, தேசிய மட்டத்திற்கு அப்பாலும் மகத்துவத்தைக் கொண்டாடுவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டியவாறு ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் தலா மூவருக்கு மாகாண பிரிவின் கீழ் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இரசாயனவியல் துறையில் ஆற்றிய மிக நீண்ட காலப் பங்களிப்பு மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும். இலங்கை இரசாயனவியல் கற்கைநிலையத்திற்கும் ஆற்றியுள்ள சேவை ஆகியவற்றிற்கு அங்கீகாரமளிக்கும் முகமாக பேராசிரியர் சுஜாதா ஹேவகே அவர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாக மாறியது. கல்வித் துறையில் நீண்ட கால நற்பேறைத் தோற்றுவித்து புலமைப்பரிசில், கற்பித்தல், மற்றும் சேவை ஆகியவற்றுடன் அறிவைப் பரப்புவதில் ஆழமான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் தொழிற்பணி ஆற்றியுள்ளவர்களைக் கௌரவிப்பதற்காக வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படுகின்றது.
பல்வேறுபட்ட பிரிவுகளின் கீழ் மிகுந்த ஆர்வத்துடனான பங்கேற்பு மற்றும் தேசிய அளவில் இதற்கு அதிகரித்து வரும் நற்பெயர் ஆகியவற்றுடன் தேசிய கல்வியாளர் விருதுகள் 2025 நிகழ்வானது இலங்கையின் மனித மூலவளம் மற்றும் நீண்ட கால அபிவிருத்தி ஆகியவற்றைக் கட்டியெழுப்பும் முக்கியமான சிற்பிகளாகவுள்ள கல்வியாளர்களை அங்கீகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

