Feb 10, 2026 - 07:41 PM -
0
நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கை நிலையத்துடன் இணைப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை CERT நிறுவனம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவை இணைந்து இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. நவீன உலகில் சைபர் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்ப விடயம் மட்டுமல்ல, அது தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றில் நேரடியாக தாக்கம் செலுத்தும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பது இங்கு வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், தகவல் உட்கட்டமைப்பு வசதிகள் இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் சைபர் பாதுகாப்பு நடவடிக்கை நிலையம் ஊடாக அரசாங்கத்தின் முக்கிய தகவல்களுக்கான அணுகலை வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கான கொள்கை ரீதியான முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதுடன், இவ்வருட இறுதிக்குள் ஏனைய அரச நிறுவனங்களையும் சைபர் பாதுகாப்பு நிலையத்துடன் இணைப்பதை இரண்டாம் கட்டமாக முன்னெடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதில் முன்னணி அரச நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், அந்த நிறுவனங்களை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் மூலம் கணக்காய்வுக்கு உட்படுத்தவும் முன்மொழியப்பட்டது.
இதுதவிர, அனைத்து அரச அதிகாரிகளுக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்ட வேண்டியதன் அவசியமும், அதற்கான பயிற்சித் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறனை அரச நிர்வாகம் மற்றும் சேவை வழங்கலின் அடிப்படை அம்சமாகக் கருத வேண்டும் என்றும், அரச இணையத்தளங்கள் முடக்கப்படுதல், ரான்சம்வேர் தாக்குதல்கள் மற்றும் தகவல் திருட்டு போன்ற சைபர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகள் சீர்குலைவதைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் இந்தப் புதிய முறைமை வாய்ப்பளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.
தேசிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கை நிலையம் மூலம் அரச நிறுவனங்களுக்கு நிகழ்நேர அச்சுறுத்தல் கண்காணிப்பு, முன் எச்சரிக்கைகள் மற்றும் முறையான ஒருங்கிணைப்புடன் கூடிய பதிலளிப்பு வசதிகள் அளிக்கப்படுவதால், இது வெறும் இணக்கப்பாட்டுப் பயிற்சி மட்டுமல்லாது நிறுவன ரீதியான நம்பகத்தன்மைக்காகச் செய்யப்படும் ஒரு முதலீடாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

