Feb 10, 2026 - 08:47 PM -
0
2026 டி20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (10) கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக அமைந்தது. சைம் அயூப் மற்றும் அணித்தலைவர் சல்மான் அகா ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
எனினும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சாஹிப்சதா பர்ஹான் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 41 பந்துகளில் 73 ஓட்டங்களைக் குவித்தார். அவருக்குத் துணையாக நின்ற பாபர் அசாம் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 46 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய ஷதாப் கான் அதிரடி காட்டி 12 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததன் மூலம் பாகிஸ்தான் அணி கௌரவமான நிலையை எட்டியது.
பந்துவீச்சில் அமெரிக்கா அணி சார்பாக ஷாட்லி வான் ஸ்கால்க்விக் (Shadley van Schalkwyk) சிறப்பாகச் செயல்பட்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி, 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஐக்கிய அமெரிக்கா அணி தனது பதிலிளிப்புத் துடுப்பாட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

