செய்திகள்
இந்தியா - பாகிஸ்தான் மோதல்: எகிறியது விமான டிக்கெட் விலை!

Feb 10, 2026 - 09:58 PM -

0

இந்தியா - பாகிஸ்தான் மோதல்: எகிறியது விமான டிக்கெட் விலை!

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கான விமானப் பயணச்சீட்டு விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

டி20 உலகக் கிண்ணத் தொடரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு, பாகிஸ்தான் அரசாங்கம் தனது அணிக்கு அனுமதி வழங்கியதையடுத்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 

விசேடமாக, இந்தியாவிலிருந்து கொழும்பு வரும் விமானங்களுக்கான டிக்கெட் விலை சாதாரண விலையை விடக் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மும்பை, டெல்லி மற்றும் சென்னை போன்ற நகரங்களிலிருந்து கொழும்பு வரும் நேரடி விமானங்களின் அனைத்து வகுப்பு பயணச்சீட்டு விலைகளும் சாதாரண நிலையை விட அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்தியா மற்றும் இலங்கையின் இணை அனுசரணையுடன் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணத் தொடரில், 20 அணிகள் 4 குழுக்களாகப் போட்டியிடுகின்றன. இதில் பரம்பரை எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் 'ஏ' (A) குழுவில் இடம்பெற்றுள்ளன. 

இருப்பினும், அண்மைக்காலமாக இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலை காரணமாக, இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை எனப் பாகிஸ்தான் அண்மையில் அறிவித்திருந்தது. இது விளையாட்டுத் துறை, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வர்த்தகத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இப்படியானதொரு பின்னணியில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்விக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, இந்தத் தீர்மானத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் நெருக்கடிகளைச் சந்தித்த போதெல்லாம் இலங்கை அவர்களுக்கு உதவியதை நினைவுகூர்ந்த அவர், இப்போட்டி நடைபெறாவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். வங்கதேச கிரிக்கெட் தலைவரும் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தார். 

ஆயினும், பெப்ரவரி 15 ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவதில்லை என்ற முடிவில் பாகிஸ்தான் உறுதியாக இருந்தது. 

இந்தச் சூழலில், இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (09) பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுடன் தொலைபேசியில் உரையாடினார். 

இதன்போது, இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடர்பான சிக்கல் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நெருக்கடியான காலங்களில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவிய வரலாற்றை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, 1996 உலகக் கிண்ணத்தின் போது இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டினார். பதிலுக்குப் பாகிஸ்தான் பிரதமரும், கடந்த வருடம் பாகிஸ்தானில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலங்கை அணி அங்கு தங்கியிருந்து விளையாடியதை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். 

அனர்த்தமொன்றின் பின்னர் நாடு மீண்டெழுந்து வரும் இத்தருணத்தில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவது இலங்கையின் சுற்றுலா, பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்திற்குப் பெரும் பலமாக அமையும் என்பதால், இப்போட்டியில் பங்கேற்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தார். இதற்குப் பாகிஸ்தான் பிரதமரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தது. 

இக்கலந்துரையாடல் இடம்பெற்றுச் சில மணித்தியாலங்களில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கோரிக்கை மற்றும் நட்பு நாடுகளின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, பெப்ரவரி 15 ஆம் திகதி இந்தியாவுடன் நடைபெறும் போட்டியில் பங்கேற்குமாறு தமது தேசிய அணிக்கு அறிவுறுத்தியுள்ளதாகப் பாகிஸ்தான் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. கிரிக்கெட் விளையாட்டின் உணர்வைக் காக்கவும், உலகளாவிய ரீதியில் இப்போட்டியின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, "நாம் அனைவரும் நேசிக்கும் இந்த விளையாட்டு தொடர்வதை உறுதி செய்தமைக்காகப் பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி கூறுகிறேன்" என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இதற்கமைய, கடந்த 10 நாட்களாக நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளதுடன், திட்டமிட்டபடி பெப்ரவரி 15 ஆம் திகதி இரவு 7 மணிக்குக் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05