Feb 11, 2026 - 02:14 PM -
0
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளராகப் பதவியேற்றுள்ள ஷானன் கோவ்லின் தலைமையிலான தூதுக்குழுவினர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பு நேற்று (10) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தூதுக்குழுவினரை வரவேற்ற பிரதமர், புதிய பணிப்பாளர் ஷானன் கோவ்லினுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தைப் பாராட்டினார்.
இலங்கையின் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ADB வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவைப் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தைக் குறைப்பதில் இத்தகைய நிறுவனங்களின் ஒத்துழைப்பு முக்கியமானது எனக் குறிப்பிட்ட பிரதமர், 'டித்வா' புயல் அனர்த்தத்தின் போது ADB வழங்கிய உதவிக்கு விசேட நன்றியைத் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ADB பிரதிநிதிகள், புயலுக்குப் பின்னரான நாட்டின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தனர்.
அத்துடன், இலங்கையின் கல்வித் துறையின் மேம்பாட்டிற்குத் தேவையான உதவிகளை வழங்கவும் தாம் தயாராக இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் SARDMs இன் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சோனா ஷ்ரேஸ்தா, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான செயற்பாட்டுப் பிரதானி சோல்பன் மம்பேடோவா, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமந்த பண்டார மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் பணிப்பாளர் ரஞ்சித் குருசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

