Feb 11, 2026 - 07:35 PM -
0
வைத்தியசாலைகளில் தொடர்ச்சியான மருந்து விநியோகத்தைப் பேணுவதற்காக, ஒவ்வொரு வைத்தியசாலையிலும் மாதத்திற்கு ஒரு முறை மருந்துகள் தொடர்பான மீளாய்வு கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.
மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்காணிப்பு விஜயமொன்றில் ஈடுபட்டிருந்த போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மருந்துகளுக்கு ஏதேனும் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னர் அதனை இனங்கண்டு அதற்கு உரிய தீர்வுகளை காண்பதற்கும், பிராந்திய கொள்வனவுகள் மூலம் வைத்தியசாலைக்குள் தொடர்ச்சியான மருந்து விநியோகத்தைப் பேணுவதற்கும் அந்த மருந்துகள் தொடர்பில் மீளாய்வு கூட்டம் மிகவும் முக்கியமானது என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லா நேரங்களிலும் வைத்தியசாலைகளில் தேவையான மருந்து இருப்பைப் பேணிக்கொள்ள முடியுமானால், அது மருந்துகள் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒரு சாதகமான தீர்வாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ விநியோகப் பிரிவின் மருந்து விநியோக வலையமைப்பை சீர்செய்ய எப்போதும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

