Feb 11, 2026 - 10:10 PM -
0
நாட்டு மக்களுக்கு செல்வம் ஈட்டும் வழிகளை உருவாக்க வேண்டும் என்றும், அதற்கான தீர்வு 'தொழில்முனைவு அரசு' என்ற எண்ணக்கருவே என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இன்று (11) கொட்டகலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு சொன்னதைச் செய்ய முடியவில்லை. அப்படியாயின் இப்போது என்ன செய்ய வேண்டும்? மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்.
அதற்குப் பதிலாக ஜனாதிபதி இப்போது எதைத் தொடர்ந்து கூறி வருகிறார்? இந்நாட்டில் இனவாதம் இருக்கிறதாம், தீவிரவாதம் இருக்கிறதாம், அது தலைதூக்க இடமளிக்கமாட்டாராம். இந்த ஜனாதிபதிக்கு தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள, இல்லாத இனவாதத்தை இந்த மண்ணில் உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனின் கைக்கும் பணம் செல்ல வேண்டும். இம்முறை சம்பளம் அதிகரிக்கும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நான் ஒன்று சொல்கிறேன் - இலங்கையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டாலோ அல்லது 'அஸ்வெசும' அதிகரிக்கப்பட்டாலோ செய்ய வேண்டியது ஒன்றுதான். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கடைக்குச் சென்று பொருட்களின் விலைகளை எழுதிக்கொள்ளுங்கள். சம்பளம் அதிகரித்த பிறகு மீண்டும் கடைக்குச் சென்று விலைகளை எழுதிக்கொள்ளுங்கள். கட்டாயமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கும்.
செல்வம் கிடைப்பதற்கு ஒரு வழி வேண்டும் - அந்த வழிமுறைதான் நாங்கள் கூறும் இந்த 'தொழில்முனைவு அரசு' என்ற எண்ணக்கரு. அந்த வழியில்தான் உலகில் பல நாடுகள் முன்னேறியுள்ளன.
மக்களுக்குப் பணம் வரும் வழிமுறையொன்றை, வறுமை ஒழியும் வழிமுறையொன்றைக் கண்டறிய வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் இவ்வாறு பாடுபடுகிறோம்.
நாம் இந்தக் கொட்டகலை தொகுதியில் 'சர்வஜன சபை' ஒன்றை உருவாக்குவோம். ஒவ்வொருவரையும் தனித்தனியாக மீட்டெடுத்து, குறிப்பாக இந்தப் பெண் தொழில்முனைவோரை மீட்டெடுத்து நாம் முன்னேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

