Feb 14, 2026 - 06:41 PM -
0
சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதில் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (14) அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனா நான்கு மாதங்களுக்கு முன்னர் 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்க நடவடிக்கை எடுத்தது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த காலப்பகுதிகளில் இலவச விசா வழங்க நாம் விரும்பினோம்.
இது குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்து, வெளிவிவகார அமைச்சுக்கும் அறிவித்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முயன்ற போது, ஒரு சட்டத் தடை ஏற்பட்டது.
விசா வழங்கும் நடைமுறையை கடந்த காலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்தமை மற்றும் அதற்கான நிதி அரசாங்கத்திற்குச் சேராமை தொடர்பில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு நீண்டகாலமாக முடிவின்றித் தொடர்கிறது. தற்போது மீண்டும் ஒரு நகர்வு மனுவைத் தாக்கல் செய்து, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

