Feb 15, 2026 - 04:15 PM -
0
இனம், மதம், குல வேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து, அறியாமையைத் தோற்கடிப்பதற்காகப் போராட வேண்டிய தருணம் வந்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இன்றைய (15) மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானுக்காக பூஜை வழிபாடுகள் நடத்தும் மகா சிவராத்திரி தினம் இன்றாகும்.
இந்துக்களின் மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான், தனது தேவி பார்வதியுடன் இணைவதையும், அவரது தெய்வீக நடனமான 'தாண்டவ நடனத்தை' ஆடுவதையும் மகா சிவராத்திரி குறிக்கின்றது.
அறியாமை எனும் இருளை அகற்றி, வாழ்க்கையை வெற்றிக்கொள்வதைக் கொண்டாடுவதே மகா சிவராத்திரியின் நோக்கமாகும்.
அந்த உன்னத நோக்கத்தை மனதில் கொண்டு, இரவு முழுவதும் விழித்திருந்து, விரதம் அனுஷ்டித்து சிவபெருமானுக்கு பூஜை வழிபாடுகளை இந்து பக்தர்கள் இன்று மேற்கொள்கின்றனர்.
வரலாற்றில் முன்னெப்பொழுதையும் விட, ஒரு நாடாக நமது கண்களை மூடியுள்ள அறியாமை எனும் இருண்ட திரையை கிழித்தெறிய ஒரு தேசத்திற்கு ஞானம் தேவைப்படும் தருணம் இது.
பொய், புரட்டு மற்றும் ஏமாற்று வேலைகள் ஆட்சி செய்யும் தருணம் இது. இந்த மண்ணில் வாழும் மக்களிடையேயும், கலாச்சாரங்களுக்கு இடையேயும் மிக சூட்சுமமாக பிளவுகள் விதைக்கப்பட்டுள்ள தருணம் இது.
இனம், மதம், சாதி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து, அந்த அறியாமையைத் தோற்கடிக்கப் போராட வேண்டிய நேரம் இது.
அந்த வகையில், மகா சிவராத்திரி வழங்கும் செய்தி நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
இன்று ஏற்றப்படும் தீபத்தின் ஒளியைப் போலவே, நம் இதயங்களிலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவம் பிரகாசிக்கட்டும் என்றும், அறியாமை, பிளவுகள் மற்றும் வறுமை அகலட்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.
இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் அனைத்து இந்து சகோதர சகோதரிகளுக்கும், அவர்களின் எண்ணங்கள் ஈடேறி, மகிழ்ச்சியும் அமைதியும் மலரும் இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது வாழ்த்துச் செய்தில் குறிப்பிட்டுள்ளார்.

