Feb 16, 2026 - 01:47 PM -
0
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவர்கள் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வு கோரியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் பிரபாத் சுகததாச இதனைத் தெரிவித்தார்.
கடந்த 11ஆம் திகதி தமது சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
"சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் தேவையான வைத்திய அதிகாரிகள் இல்லை. சில சமயங்களில் தேவையான மேலதிக சுகாதார வைத்திய அதிகாரிகள் இல்லை. இதனால் பொதுமக்களுக்குச் சேவைகளை வழங்கும் போது அதிக சுமையை ஏற்க வேண்டியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்கள் இல்லாததால், அவர்கள் தமது எல்லைக்கு அப்பாற்பட்டு கடமைகளைச் செய்ய வேண்டியுள்ளது. அதேபோல், அங்கீகரிக்கப்பட்ட வைத்திய அதிகாரிகளின் எண்ணிக்கை இற்றைப்படுத்தப்படவில்லை, ஆனால் சனத்தொகை அதிகரித்துள்ளது. அதற்கு இணையாக வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
அதேபோல், ஏனைய ஊழியர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்ப நலச் தாதியர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியாலேயே இந்தச் சேவை வழங்கப்படுகிறது. இவர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இன்றும் இந்தச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளிலும் பிரச்சினைகள் உள்ளன. கைவிடப்பட்ட அலுவலகங்களே இன்றும் தற்காலிக அடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களாக நடத்தப்படுகின்றன.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் பிரதான பிரச்சினை களப் பணிகளாகும். ஆனால் இதனைச் செய்வதற்குப் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படவில்லை. வழங்கப்பட்டுள்ள வாகனங்களை இயக்குவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. இதனால் அவர்கள் தமது சொந்தச் செலவிலேயே இப்பணிகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறே இந்த அதிகாரிகள் இந்த முறைமையைப் பராமரித்து வருகின்றனர்.
இந்த முறைமைக்கு முக்கியமாகத் தரவுகளை வழங்குவதில் இருந்து விலக சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்தத் தரவுகள் மூலமே தற்போதுள்ள நிலைமை குறித்து பகுப்பாய்வு செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து எதிர்வுகூறப்படுகிறது.
இது தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்கள் தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலமே நாட்டின் சுகாதாரம் குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. நாட்டின் சுகாதாரத்தைப் பொறுத்தவரை இந்தத் தரவுகள் மிகவும் முக்கியமான காரணியாகும்." என்றார்.

