Feb 16, 2026 - 07:15 PM -
0
கொமர்ஷல் வங்கியானது, Mastercard மற்றும் Google உடன் இணைந்து, தனது Mastercard வரவு மற்றும் கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு Google Pay ஆதரவை அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கையின் டிஜிட்டல் கட்டண துறையில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம், வங்கியானது தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மிக முன்னேற்றமான வங்கி அனுபவங்களை வழங்குவதில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அறிமுகத்துடன், கொமர்ஷல் வங்கி வழங்கிய Mastercard வரவு மற்றும் கடன் அட்டை வைத்திருப்பவர்கள், தமது அட்டைகளை Google Pay கட்டண செயலியில் இணைத்து, NFC வசதி கொண்ட Android ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி பாதுகாப்பான, தொடர்பில்லா “tap & go” பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள், இலங்கை முழுவதும் தொடர்பில்லா வசதி கொண்ட விற்பனை முனையங்களிலும், Mastercard ஏற்றுக்கொள்ளப்படும். உலகின் எந்த இடத்திலும் தடையில்லாமல் பரிவர்த்தனைகள் செய்யலாம். இதனால், தம்முடனேயே அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் நீங்குகிறது.
இந்த தீர்வானது, ஒவ்வொரு பரிவர்த்தனையையும் பாதுகாப்பதற்காக மேம்பட்ட டோக்கனைசேஷன் (tokenisation) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. உண்மையான அட்டை இலக்கங்கள் பாதுகாப்பான டிஜிட்டல் டோக்கன்களால் மாற்றப்படுவதால், முக்கியமான அட்டை விவரங்கள் வர்த்தகர்களுடன் பகிரப்படுவதோ, சாதனங்களில் சேமிக்கப்படுவதோ இல்லை. ஒவ்வொரு அட்டையும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள் (One-Time Passwords – OTP) அல்லது வங்கி உறுதிப்படுத்தல் மூலம் அங்கீகரிக்கப்படுவதால், உலகளாவிய பாதுகாப்பு தரநிலைகளையும் அன்றாட வசதியையும் ஒருங்கிணைத்த கட்டண அனுபவம் வழங்கப்படுகிறது.
இந்த அறிமுகம் தொடர்பாக கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க கருத்து தெரிவிக்கையில்:
இலங்கையில் முதன்முறையாக Google Pay சேவையை அறிமுகப்படுத்தி, அதை எமது Mastercard அட்டை வைத்திருப்பவர்களுக்கும் வழங்குவது, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையில் எவ்வித சந்தேகமும் இன்றி, உலகத் தரத்திலான டிஜிட்டல் கட்டண தீர்வுகளை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எமது உறுதியை வெளிப்படுத்துகிறது. இந்த முயற்சியானது, இலங்கையில் டிஜிட்டல் ஏற்றுக்கொள்ளலை முன்னெடுக்கின்ற ஒரு ஊக்கியாக எமது பங்கை மேலும் வலுப்படுத்துவதோடு, எமது வாடிக்கையாளர்களுக்கு உலகளவில் நம்பிக்கையுடனும், வேகத்துடனும், எளிமையுடனும் பரிவர்த்தனை செய்யும் சுதந்திரத்தையும் வழங்குகிறது. கொமர்ஷல் வங்கியில், டிஜிட்டல் புத்தாக்கம் என்பது புதுமைக்காக மட்டுமல்ல் அது எமது வாடிக்கையாளர்களின் அன்றாட வாழ்க்கையில் வசதியை அதிகரிக்கும் நடைமுறை சார்ந்த, பாதுகாப்பான தீர்வுகளை வழங்குவதுடன், நாட்டின் நிதி சூழலை முன்னோக்கி நகர்த்துவதுமே ஆகும்.
Mastercard நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான வதிவிட முகாமையாளர் திரு. சந் துன் ஹப்புகொட தெரிவிக்கையில்:
இந்த முயற்சியானது, கொமர்ஷல் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் Mastercard அட்டை வைத்திருப்பவர்களுக்கும் பாதுகாப்பு, வசதி மற்றும் தெரிவில் ஒரு புதிய நிலையை அறிமுகப்படுத்துகிறது. தங்கள் அட்டைகளை Google Pay-யில் எளிதாகச் சேர்ப்பதன் மூலம், அட்டை வைத்திருப்பவர்கள் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் நம்பிக்கையுடன் ‘Tap & Go’ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். டோக்கனைசேஷன் தொழில்நுட்பம், அட்டை விவரங்களை தொடக்கம் முதல் முடிவு வரை பாதுகாத்து, 210-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ஒவ்வொரு பரிவர்த்தனையும் பாதுகாப்பாகவும் தடையில்லாமல் ஏற்றுக்கொள்ளப்படுவதை உறுதிசெய்கிறது. மேலும், இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு தொடர்பில்லா Mastercard பரிவர்த்தனையும் Trail Cancer Hospital கட்டுமானத்திற்குப் பங்களிப்பாக அமையும். இந்த பங்குடைமையானது, அன்றாட பயன்பாட்டைத் தாண்டி நீடித்த சமூக தாக்கத்தை உருவாக்கும் வகையில் டிஜிட்டல் கட்டணங்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதைவெளிப்படுத்துகிறது; இது நன்மை செய்வதன் மூலம் நலம் பெறுதல் (‘Doing Well by Doing Good’) என்ற Mastercard நிறுவனத்தின் உறுதியை பிரதிபலிக்கிறது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

