விளையாட்டு
17 வருடங்களின் பின் சரித்திரத்தை மாற்றியெழுதியது இலங்கை!

Feb 17, 2026 - 09:25 AM -

0

17 வருடங்களின் பின் சரித்திரத்தை மாற்றியெழுதியது இலங்கை!

பெத்தும் நிஸ்ஸங்கவின் சாதனைச் சதத்தின் உதவியுடன், அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இலங்கை அணி, இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.


நேற்று (16) இரவு பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 'B' குழுவிற்கான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தார்.


இலங்கை அணியில் ஒரு மாற்றமாக கமில் மிஷாரவிற்குப் பதிலாகக் குசல் ஜனித் பெரேரா இணைத்துக்கொள்ளப்பட்டார்.


அவுஸ்திரேலிய அணிக்கு ட்ராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 51 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து பல்லேகல ரசிகர்களைச் சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.


எனினும், ட்ராவிஸ் ஹெட் 56 ஓட்டங்களுடனும், மிட்செல் மார்ஷ் 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். விக்கெட் இழப்பின்றி 104 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவுஸ்திரேலியா, எஞ்சிய 77 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களுக்குச் சுருண்டது.


பந்துவீச்சில் துஷான் ஹேமந்த 3 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இதேவேளை, பந்துவீசிக் கொண்டிருந்த மதீஷ பத்திரண இடது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாகப் பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு இன்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.


அதன்படி, 182 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.


பின்னர் கைகோர்த்த குசல் மெந்திஸ் மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஜோடி, 2-வது விக்கெட்டுக்காக 66 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். இத்தொடரில் தொடர்ச்சியாக 3-வது அரைச்சதத்தைப் பூர்த்தி செய்த குசல் மெந்திஸ் 51 ஓட்டங்களைப் பெற்றார்.


இறுதி 20 பந்துகளில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், பெத்தும் நிஸ்ஸங்க தனது முதலாவது உலகக் கிண்ணச் சதத்தைப் பூர்த்தி செய்து அணியை வெற்றி பெறச் செய்தார்.


இது டி20 போட்டிகளில் பெத்தும் நிஸ்ஸங்கவின் 2-வது சதமாகும் (10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்).


உலகக் கிண்ணப் போட்டியொன்றில் இலங்கையர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும் (முன்னர் மஹேல ஜயவர்தனவின் சாதனை முறியடிக்கப்பட்டது).


2014-க்குப் பிறகு உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வீரர் ஒருவர் பெற்ற முதல் சதம் இதுவாகும்.


17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவை இலங்கை அணி தோற்கடித்துள்ளது.


போட்டியின் ஆட்டநாயகனாகப் பெத்தும் நிஸ்ஸங்க தெரிவு செய்யப்பட்டார்.


அவுஸ்திரேலியா 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமானால், இன்று நடைபெறும் போட்டியில் அயர்லாந்து அணி சிம்பாப்வேயை வீழ்த்த வேண்டும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05