Feb 17, 2026 - 01:12 PM -
0
கனடா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தற்போது (17) நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரின் 31-வது லீக் போட்டியில், கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. கனடா அணியின் இளம் வீரரான யுவராஜ் சம்ரா நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சதமொன்றைப் பதிவு செய்தார்.
64 பந்துகளைச் சந்தித்த யுவராஜ் சம்ரா, 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 110 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். டி20 உலகக் கிண்ண வரலாற்றில் சதம் அடித்த மிக இளம் வயது வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுவராஜ் சம்ரா மற்றும் அணித்தலைவர் தில்ப்ரீத் பஜ்வா ஜோடி முதல் விக்கெட்டுக்காகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்தது. தில்ப்ரீத் பஜ்வா 36 ஓட்டங்களைப் பெற்றார்.
நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் மெட் ஹென்றி, ஜேக்கப் டஃபி மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
தற்போது 174 என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 35 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.

