வணிகம்
விளையாட்டின் நீண்டகால வளர்ச்சியை முன்னேற்ற SLTA இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக்கின் உருவாக்கத்தை அறிவித்தது

Feb 17, 2026 - 04:06 PM -

0

விளையாட்டின் நீண்டகால வளர்ச்சியை முன்னேற்ற SLTA இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக்கின் உருவாக்கத்தை அறிவித்தது

இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) அதிகாரப்பூர்வமாக “இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக்” (SLTPL) உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இலங்கையில் டென்னிஸ் விளையாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் அடித்தளம் இடப்பட்டுள்ளது. 

இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக்கின் [SLTPL] நிகழ்வானது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 முதல் 25 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இலங்கை டென்னிஸ் வீரர்களை ஒன்றிணைக்கும் வகையில் தொழில்முறை நிர்வாகத்துடன், ஃபிராஞ்சைஸ் அடிப்படையிலான போட்டியாக இது நடத்தப்படும். இந்த லீக்கில் நாட்டின் முக்கிய பிராந்தியங்களான கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் நீர்கொழும்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு நகர அடிப்படையிலான அணிகள் பங்குபற்றவுள்ளன. 

ஒவ்வொரு அணியிலும் பல்வேறு திறமையான வீரர்கள் இடம்பெறுவர். இது போட்டித்தன்மையை அதிகரிப்பதோடு புதிய அனுபவங்களையும் கற்கும் வாய்ப்புகளையும் உருவாக்கும் அதே வேளை ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகமூட்டும் வகையில் இந்த டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படும். இலங்கை டென்னிஸ் சங்கத்தின் தலைவர் திரு. இக்பால் பின் இஸ்ஸக் இது தொடர்பாக தெரிவிக்கையில் “இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் உருவாக்கப்பட்டமையானது டென்னிஸ் விளையாட்டிற்கான மாற்றத்தைக் கொண்டு வரும் ஒரு முக்கிய முன்னேற்றமாக நாம் கருத முடியும். இது நிலைத்தன்மை வாய்ந்த, எதிர்கால நோக்கமுடைய ஒரு மாதிரியை அறிமுகப்படுத்துகிறது. இது டென்னிஸை அனைத்து மட்டங்களிலும் வலுப்படுத்துவதோடு வர்த்தக ரீதியான அனைத்து வெற்றிகளும் மீண்டும் விளையாட்டின் மேம்பாட்டிற்கே முதலீடு செய்யப்படும் என்பதை உறுதி செய்கிறது. SLTPL, இலங்கையில் டென்னிஸிற்கான அணுகலை விரிவுபடுத்துதல், தரநிலைகளை உயர்த்துதல் மற்றும் நீடித்த உள்கட்டமைப்பை உருவாக்குதல் என்ற SLTA-வின் நீண்டகால நோக்கத்துடன் நெருக்கமாக ஒத்திசைகிறது,” என்றார். 

SLTPL, ஆனது இலங்கையில் டென்னிஸின் நீண்டகால அபிவிருத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட, நிலைத்தன்மை கொண்ட ஒரு தளத்தை நிறுவுவதை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 100% இலாப நோக்கமற்ற முயற்சியாக செயல்படவுள்ள இந்த லீக் மூலம் கிடைக்கும் அனைத்து இலாபங்களும் நேரடியாக விளையாட்டிற்கே மீளமுதலீடு செய்யப்படும். இதன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாடு, வீரர்களுக்கான முன்னேற்ற பாதைகள், பிராந்திய மட்ட அணுகல் மற்றும் நாடு முழுவதும் விரிவான பங்கேற்பு ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளன. “SLTPLஆனது இலங்கையின் போட்டித் தரநிலைகளை உயர்த்துவதோடு, படிப்படியாக சர்வதேச பங்கேற்புக்கான வாய்ப்புகளையும் வழங்கும் நீண்டகால வளர்ச்சி தளமாக தந்திரோபாயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைக்கப்பட்ட போட்டி அமைப்பானது, வெளிப்பாடு மற்றும் விளையாட்டிற்கான நிலையான முதலீட்டை உருவாக்குவதன் மூலம், இலங்கை டென்னிஸின் வளர்ச்சியை வேகப்படுத்தும். மேலும், எமது வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் உள்கட்டமைப்பை விரிவான உலக டென்னிஸ் சூழலில் நிலைநிறுத்தும். இந்த முயற்சியானது, இலங்கையில் டென்னிஸிற்கான வலுவான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் முக்கியமான முதல் படியாகும்,” என்று இலங்கை டென்னிஸ் சங்கத்தின் துணைத்தலைவரும் போட்டிகள் மற்றும் போட்டி ஒருங்கிணைப்புகளுக்கான தலைவருமான திரு. ருக்மல் கூரே தெரிவித்தார். 

நிபுணத்துவமுள்ள நிர்வாகத்துடன் வர்த்தக நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பானது, நீண்டகால நிதியளிப்பு மற்றும் வளர்ச்சி முகவராக செயல்படும். இதன் மூலம் நாட்டின் முழுமையான வளர்ச்சிக்கு நிதி உதவி அளிக்கப்படும்.இந்த லீக் ஆனது தற்காலிக அல்லது நிகழ்வு- சார்ந்த அனுசரணைகளை நம்பியிருக்காமல், உரிமையாளர் கட்டணம் (Franchise fees), பல ஆண்டுகால அனுசரணைக்கான ஒப்பந்தங்கள், ஊடக உரிமைகள் மற்றும் விருந்தோம்பல் சேவைகள் மூலம் நிலையான வருவாயை ஈட்ட வேண்டும் என்ற நோக்கில், அதன் வர்த்தகக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை நிதி ஒழுக்கம், மற்றும் விளையாட்டில் நீண்டகால முதலீட்டை உறுதி செய்கிறது. 

“ஆரம்பத்தில் இருந்தே இலங்கையில் ஒரு தொழில்முறை, ஃபிராஞ்சைஸ் அடிப்படையிலான டென்னிஸ் லீக்கை உருவாக்குவதுடன் அதற்கு நிதியளிப்பதுடன் அதனை செயற்படுத்துவதே எமது நோக்கமாக இருந்தது. இந்த லீக்கின் வெற்றியை உறுதி செய்வதற்கு வலுவான நிர்வாகமும் ஒழுங்குமுறை கண்காணிப்பும் வழங்கும் SLTA-உடனான பங்குடமையுடன் மட்டுமே இதைச் செயல்படுத்த முடியும் என்று நாம் நம்புகிறோம்,” என்று லீக்கை பிரதிநிதித்துவப்படுத்தி ரோஷன் சில்வா தெரிவித்தார். 

SLTPL ஆனது ஒரு அடிப்படை யதார்த்தத்தை அங்கீகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது: இலங்கை சவாலினை எதிர்கொள்வது திறமை, பயிற்சி திறன் அல்லது நிர்வாக நோக்கம் இல்லாததால் அல்ல - மாறாக நிலையான நிதி வழிமுறைகள் மற்றும் மூலதன உள்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவை இல்லாததாலேயே ஆகும். இந்த நிலையில் இந்த முக்கிய சவாலை முறியடிப்பதே எமது முக்கிய குறிக்கோள் ஆகும், என்று அவர் மேலும் கூறினார். 

இலங்கை டென்னிஸ் சங்கத்தின் (SLTA) அங்கீகாரத்துடன், கட்டமைக்கப்பட்ட நிர்வாக மற்றும் வர்த்தக மாதிரியின் கீழ் SLTPL நிறுவப்படுகிறது. விளையாட்டு, சட்டம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ துறைகளில் அனுபவமுள்ள நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், தனித்துவமான நிறுவன அமைப்பின் மூலம் இயங்கவுள்ள இந்த லீக் ஆனது, நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயலாக்கத் திறன் ஆகியவற்றில் சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் டென்னிஸை உயர்த்தும் ஒருங்கிணைந்த உறுதிப்பாட்டுடன், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நீண்டகால முயற்சியாக இது அமைகிறது. 

2026 ஏப்ரலில் தொடக்கப் போட்டி நடைபெற உள்ள நிலையில், SLTPL இலங்கை டென்னிஸில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆர்வத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய முதலீடுகளை ஈர்த்து, நீண்டகால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான விரிவுபடுத்தக்கூடிய மாதிரியை உருவாக்கும் வாய்ப்பையும் இது வழங்கும். ஃபிராஞ்சைஸ்கள், வீரர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஒளிபரப்பு தொடர்பான மேலதிக அறிவிப்புகள் எதிர்வரும் வாரங்களில் வெளியிடப்படும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05