வணிகம்
பாரிய தொழிற்துறை கண்காட்சியை தொடர்ந்து சர்வதேச வர்த்தக உரிமங்கள் இலங்கை சந்தையில் நம்பிக்கையை வெளிப்படுத்தல்

Feb 17, 2026 - 04:10 PM -

0

பாரிய தொழிற்துறை கண்காட்சியை தொடர்ந்து சர்வதேச வர்த்தக உரிமங்கள் இலங்கை சந்தையில் நம்பிக்கையை வெளிப்படுத்தல்

Sri Lanka Franchise Expo 2026 நிகழ்வில் இலங்கையின் வர்த்தக உரிமத் (Franchise) துறை சர்வதேச ரீதியாகப் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிகழ்வு அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தெற்காசியாவிலேயே மிகவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக உரிமச் சந்தையாக இலங்கை உருவெடுத்து வருவதாக இத்துறைசார் அவதானிகள் குறிப்பிடும் நிலையில், ஒரு டசனுக்கும் மேற்பட்ட உலகளாவிய வர்த்தக நாமங்கள் இங்கு தமது விரிவாக்க வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்திருந்தன. 

Franglobal மற்றும் Don Stanley Holdings ஆகியவற்றின் அங்கமான Fat Crab நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டமை இவ்வைபவத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும். கடல் உணவுக் கலாசாரம் செழித்துக் காணப்படும் இந்தியாவின் தென்பகுதிக்கு விஸ்தரிக்கப்படவுள்ள இந்த வணிகம், 2028 ஆம் ஆண்டளவில் இந்தியா முழுவதும் 25 விற்பனை நிலையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து தென்கிழக்காசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. 

பெப்ரவரி 14 ஆம் திகதி கொழும்பு Marino Beach Hotel இல் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பாரம்பரிய புத்தாக்க முயற்சிகளில் இடர் அபாயங்கள் அதிகரித்துக் காணப்படும் சூழலில், நிரூபிக்கப்பட்ட வணிக மாதிரிகளை எதிர்பார்க்கும் உள்நாட்டு தொழில்முயற்சியாளர்களையும் முதலீட்டாளர்களையும், பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த வர்த்தக உரிம உரிமையாளர்களுடன் (Franchise principals) இந்த கண்காட்சி ஒன்றிணைத்தது. 

தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. சுனில் ஹந்துன்னெத்தியின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு ஆரம்பமாகியதுடன், நிகழ்வில், இந்திய உயர் ஸ்தானகராலயத்தின் பொருளாதார மற்றும் வணிகப் பிரிவின் ஆலோசகர் மற்றும் தலைமைச் செயற்பாட்டாளரான தேவிகா லால் பங்கேற்றிருந்தார். வழமையான வர்த்தக விரிவாக்கத்திற்கு அப்பால், கட்டமைக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை வர்த்தக உரிமம் பிரதிபலிக்கிறது எனும் கொள்கை ரீதியான அங்கீகாரத்தை மேலும் உறுதி செய்திருந்தது. 

அமைச்சர் ஹந்துன்னெத்தியின் உரையாற்றுகையில், “எமது நாடு தொழில்முனைவு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை வலுப்படுத்தி வரும் இவ்வேளையில், இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வர்த்தக நாமங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் துறைசார் தலைவர்களை ஒன்றிணைத்தமைக்காக பிராங்க்ளோபல் (Franglobal) நிறுவனத்தை நாம் பாராட்டுகிறோம். Franchising என்பது வெறும் ஒரு வணிக மாதிரி மட்டுமல்ல; அது பொருளாதார வளர்ச்சி, புத்தாக்கம், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் மேம்பாடு ஆகியவற்றுடன் அறிவுப் பகிர்வு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்குமான ஒரு சக்திவாய்ந்த ஊடகமாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகின்றது.” என்றார். 

தேவிகா லால் உரை: “இந்தியாவும் இலங்கையும் மிகவும் வலுவான பொருளாதார அடிப்படைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாகவும், சுற்றுலாத்துறையின் முதன்மை மூலாதாரமாகவும் இந்தியா விளங்குகின்றது. அத்துடன் கடந்த ஆண்டில், இலங்கையின் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் ஐம்பது சதவீதமானது இந்தியாவிலிருந்தே கிடைத்துள்ளது. எமது இரு நாடுகளினதும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் துறையானது, வாழ்வாதாரங்களை உருவாக்குவதிலும், வேலைவாய்ப்புகளைத் தோற்றுவிப்பதிலும், வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றது. இருதரப்பு முதலீடுகளுக்கு இது ஒரு சிறந்த தருணமாகும். அத்துடன், எமது வர்த்தகச் சமூகங்களை ஒன்றிணைப்பதிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் Franchise Expo போன்ற நிகழ்வுகள் தீர்க்கமான பங்கினை வகிக்கின்றன.” என்றார். 

ஆறு பிரதான வர்த்தக சம்மேளனங்களும் மற்றும் தொழில்சார் அமைப்புகளும் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளன. அவையாவன: இலங்கை - இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இலங்கை தேசிய கைத்தொழில் சம்மேளனம், இலங்கையின் சர்வதேச வர்த்தக சம்மேளனம், கொழும்பு வர்த்தக சம்மேளனம், இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் கூட்டமைப்பு மற்றும் இந்திய சிறு வணிக மற்றும் வர்த்தக உரிமச் சங்கம். இந்த ஒன்றிணைவானது, பொருளாதாரத்தில் பலமடங்கு நன்மைகளைத் தரக்கூடிய ஒரு காரணியாக வர்த்தக உரிமத்துறை விளங்கும் என்பதற்கான நிறுவன ரீதியான ஏகோபித்த கருத்தை வெளிப்படுத்துகின்றது. 

கோப்பி சில்லறை வர்த்தகம், உடற்பயிற்சி நிலையங்கள், தொழில்சார் சேவைகள் மற்றும் துரித உணவு உணவகங்கள் எனப் பல துறைகளைச் சார்ந்த சர்வதேசப் பங்கேற்பாளர்கள், ஆரம்பகட்ட மதிப்பீடுகளைக் காட்டிலும் கணிசமான அளவு முதிர்ச்சியடைந்த மற்றும் தெளிவானதொரு நுகர்வோர் கூட்டத்தை பார்வையிட்டு விபரங்களை அறிந்து கொண்டனர். Stellarossa, EasyGym, Coffeeshop Company, Action Coach, U Clean, Blenz Coffee, Tea Avenue, Impasti Pizza, Burgertory, Figaro's Pizza, Barcelos, Yogurt Factory மற்றும் Orane International போன்ற வர்த்தக நாமங்கள், இலங்கையின் நகர்ப்புற மையங்களில் துரித வளர்ச்சியைப் பெற்றுவரும் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 

2025 ஏப்ரல் மாதம் நடைபெற்ற Global Franchise Forum முதல் இலங்கையின் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றி வரும், Franchise India Group இன் தலைவர் கௌரவ் மரியா, சந்தையின் தயார்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பற்றி விவரிக்கையில், இலங்கையை ஏனைய நாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது வெறும் பொருளாதார மீட்சி சார்ந்த புள்ளிவிபரங்கள் மட்டுமல்ல, மாறாக இங்குள்ள வர்த்தக உரிம வாய்ப்புகளை அணுகும் தொழில்முயற்சியாளர்களின் தராதரமும் ஆகும். இவர்கள் மூலதன ஒழுக்கம், சர்வதேச அனுபவம் மற்றும் தெளிவான விரிவாக்கத் திட்டங்களைக் கொண்ட வணிகச் செயற்பாட்டாளர்களாக விளங்குகின்றனர். வளர்ந்து வரும் சந்தைகளில் இத்தகையதொரு கலவையை காண்பது மிகவும் அபூர்வமானதாகும். என்றார். 

பல காரணிகள் வர்த்தக உரிமையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைகின்றன. பிராந்திய ரீதியில் பார்க்கும்போது 22 மில்லியன் சனத்தொகை என்பது சிறியதாகத் தோன்றினாலும், நகர்ப்புறப் பகுதிகளில் செறிவான கொள்வனவுச் சக்தியை இலங்கை கொண்டுள்ளது. இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவுக்கு இடைப்பட்ட நில அமைப்பானது இலங்கைக்கு ஒரு புவியியல் ரீதியான அனுகூலத்தை வழங்குகின்றது. மேலும், அறிவுசார் சொத்துரிமை மற்றும் ஒப்பந்த அமுலாக்கம் தொடர்பான சட்டக் கட்டமைப்புகள் சர்வதேச தரத்திற்கு இணையாக உள்ளன. சுற்றுலாத்துறையின் மீட்சியானது வணிகப் பகுதிகளில் மீண்டும் நுகர்வோர் வருகையை அதிகரித்து வருகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, உள்ளூர் வணிகச் சமூகம் ஊக வணிகங்களை விட, ஒரு கட்டமைக்கப்பட்ட செயல்பாட்டு முறைகளையே பெரிதும் விரும்புகின்றது. 

வர்த்தக உரிமம் பெறுவோரின் பார்வையில், இதன் பெறுமதி என்பது வணிக இடர் அபாயங்களைக் குறைப்பதிலேயே தங்கியுள்ளது. கடன் வசதிகளைப் பெறுவதில் சவால்கள் நிலவும் மற்றும் வணிகங்கள் தோல்வியடையும் வீதம் அதிகமாகக் காணப்படும் சந்தைகளில், ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒரு வணிக மாதிரியை, அதன் வர்த்தக நாம அங்கீகாரம் மற்றும் விநியோகஸ்தர் தொடர்புகளுடன் பெற்றுக்கொள்வது, அந்த வணிகம் நிலைத்திருப்பதற்கான வாய்ப்பை கணிசமாக அதிகரிக்கின்றது. உறவுமுறைகளை மட்டும் சார்ந்து இயங்கும் பாரம்பரிய வணிக மாதிரிகளுக்குப் பழகிய உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு, வர்த்தக உரிமம் முறையிலான தரப்படுத்தப்பட்ட செயல்முறைகள், முகாமைத்துவச் சிக்கல்கள் இன்றி வணிகத்தை விரிவுபடுத்த உதவும். 

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் வெறும் பெயரளவிலான பங்கேற்பைத் தாண்டிய செயற்திறன் மிக்க ஈடுபாடானது, வர்த்தக உரிமத்துறையின் வளர்ச்சியானது வேலைவாய்ப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்தும் என்பதையும், பல்வேறு துறைகளிலும் முறையான வணிக நடைமுறைகளை உருவாக்கும் என்பதையும் அரசாங்கம் அங்கீகரித்துள்ளதை எடுத்துக் காட்டுகின்றது. தனியார் துறையின் இச்செயற்பாடுகளுக்கும் அரச கொள்கைகளுக்கும் இடையிலான இந்த இணக்கப்பாடானது, தற்காலிகமான வளர்ச்சியாக அன்றி, ஒரு நிலையான அபிவிருத்திக்கான சூழலை உருவாக்குகின்றது. 2025 ஏப்ரல் மாதம் நடைபெற்ற 'Global Franchise Forum' நிகழ்வைத் தொடர்ந்து இந்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது. சர்வதேச வர்த்தக நாமங்களுக்கும் இலங்கையின் பங்குதாரர்களுக்கும் இடையில் ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, வெறும் பத்து மாதங்களுக்குள் அவை உறுதியான கூட்டாண்மை உடன்படிக்கைகளாக மாற்றமடைந்துள்ளமை, இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள வேகமான வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05