Feb 17, 2026 - 11:49 PM -
0
மிகக் குறுகிய காலத்திற்குள் இலங்கை பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அத தெரணவுடன் இடம்பெற்ற பிரத்யேக நேர்காணலின் போது இதனைக் குறிப்பிட்டார்.
இந்திவரி அமுவத்த: டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீங்கள் விஜயம் செய்ததாக அறிந்தோம். இலங்கை மக்கள் எதிர்கொண்ட அந்தப் பாதிப்பை நீங்கள் தனிப்பட்ட ரீதியில் உணர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறோம்?
கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா : டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவ்வளவு பாதிப்புகளுக்கு மத்தியிலும் மக்கள் மனவலிமையுடன் இருப்பதை நான் கண்டேன். அதேபோல், அரசாங்கம் மிகவும் வேகமாகவும் ஸ்திரமாகவும் செயற்பட்ட விதம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். IMF அமைப்பினால் 200 மில்லியன் டொலர் அவசர நிதி உதவியை வழங்க முடிந்தது. அது சரியான நேரத்தில் வழங்கப்பட்டதால், இந்த விபத்தினால் ஏற்பட்ட வேதனையை அந்த மக்கள் தனித்துத் தாங்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.
இந்திவரி அமுவத்த: பொருளாதாரப் பின்னடைவுகளின் போது தளராமல் இருப்பதற்கு, அரசியல் தலைமைத்துவத்திற்கும் அதிகாரிகளுக்கும் நீங்கள் வழங்கும் செய்தி என்ன?
கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா: உண்மையில் கடந்த தசாப்தத்தில் இலங்கை பல சவால்களை எதிர்கொண்டது. இப்போது நாட்டுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. முதன்முறையாக மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த ஒரு அரசாங்கம் உள்ளது. அந்த நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் தனது கடமையைச் செய்து வருகிறது. எனது அனுபவத்திலிருந்து கூறுகிறேன், முதலாவதாக, மிகக் குறுகிய காலத்தில் பேரண்ட பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளது. 70% ஆக இருந்த பணவீக்கம் தற்போது 2% ஆகக் குறைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி மறைப் பெறுமானத்தில் இருந்து தற்போது 5% ஆக நேர் பெறுமானத்திற்கு உயர்ந்துள்ளது. ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் மக்களின் நலனில் உண்மையான அக்கறை உள்ளது. ஒரு நாடு ஒற்றுமையாக இருக்கும்போதுதான் வெற்றி கிடைக்கும். அதனை அடைய அரசாங்கம் பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
இந்திவரி அமுவத்த: பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான சீர்திருத்தங்களைத் தாங்கிக்கொண்ட மக்களுக்கு எப்போது நிவாரணம் கிடைக்கும்?
கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா: உங்கள் ஒற்றுமையைக் கொண்டாடுங்கள். நீங்கள் ஒன்றாக இணையும்போது மிகவும் பலமானவர்கள். மக்களிடம் உள்ள தனித்துவமான பண்புகள் மூலம் உச்சகட்ட வெற்றியை அடையுங்கள். இது சிறந்த விருந்தோம்பல் பண்பைக் கொண்ட ஒரு நாடு, சுற்றுலாப் பயணங்களுக்கு மிகவும் பொருத்தமானது. சுற்றுலாத்துறை இந்த நாட்டுக்கு மிக முக்கியமான ஒரு துறையாகும் எனத் தெரிவித்தார்.

