வணிகம்
Prime Lands Residencies PLC - 2025/26 நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் வலுவான வருமான வளர்ச்சியைப் பதிவு: நிதி உறுதிப்பாட்டைய

Feb 18, 2026 - 01:34 PM -

0

Prime Lands Residencies PLC - 2025/26 நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் வலுவான வருமான வளர்ச்சியைப் பதிவு: நிதி உறுதிப்பாட்டைய

Prime Lands Residencies PLC (CSE: PLR) நிறுவனம், 2025 டிசம்பர் 31 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான தனது வலுவான நிதிப் பெறுபேறுகளை வெளியிட்டுள்ளதன் மூலம் பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாத காலப்பகுதியில் நிறுவனத்தின் பங்கு விலையானது 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளமை, முதலீட்டாளர்களின் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அளவிலான திட்டங்களின் அறிமுகங்களே இந்த உயர்ந்த சந்தை எதிர்பார்ப்புகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன. இதில் The Border Colombo (484 அலகுகள்) திட்டத்தின் மூன்று கோபுரங்கள், J’adore Negombo (333 அலகுகள்), The Golf Colombo 08 (64 அலகுகள்), Mon Vie Colombo 05 (349 அலகுகள்), Prime Colombo 9 (559 அலகுகள்) மற்றும் The Seasons Colombo 08 (44 அலகுகள்) ஆகிய திட்டங்கள் உள்ளடங்குகின்றன. 

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இக்காலாண்டிற்கான வருமானம் 43 சதவீதத்தினால் அதிகரித்து 2.80 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. The Border Colombo திட்டத்தின் Tower C கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள துரித முன்னேற்றமும், The Seasons Colombo 08 திட்டத்திலிருந்து முதன்முறையாகக் கிடைக்கப்பெற்ற வருமான அங்கீகாரமுமே இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளன. அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஏனைய புதிய திட்டங்களின் வருமானமானது, கட்டுமான மைல்கற்கள் மற்றும் நிறுவனத்தின் விவேகமான வருமான அங்கீகாரக் கொள்கைக்கு இணங்க வரும் காலங்களில் அங்கீகரிக்கப்படவுள்ளது. இது வருங்காலங்களில் வருமான வளர்ச்சியடைவதற்கான வலுவான சாத்தியக்கூறுகளை உறுதிப்படுத்துகின்றது. 

நிறுவனத்தின் மொத்த இலாபமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 111 சதவீதத்தினால் அதிகரித்து, இரண்டு மடங்கிற்கும் மேலாக 1.05 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. இக்கணிசமான முன்னேற்றமானது, மேம்படுத்தப்பட்ட திட்ட இலாப வரம்புகள் மற்றும் வலுவான செயல்பாட்டுத் திறனைப் பிரதிபலிக்கின்றது. நாட்டின் புகழ்பெற்ற கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் கிடைக்கப்பெற்ற பாரிய அளவிலான சிக்கனங்கள், விலைமனு முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட்ட மூலோபாய முன்னெடுப்புகள், மேம்படுத்தப்பட்ட கொள்வனவுத் திட்டமிடல் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட கட்டுமான காலக்கெடு போன்றன இந்த இலாப வரம்பு அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன. குறிப்பாக, Tower C கட்டடத்தின் உச்சக்கட்ட நிர்மாணப் பணிகள் (Topping-off) திட்டமிடப்பட்ட காலத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Prime குழுமமானது இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் நிதியத்திற்கு 200 மில்லியன் ரூபாயை வழங்கியிருந்ததுடன், அதில் Prime Lands Residencies PLC நிறுவனம் 100 மில்லியன் ரூபாயை பங்களிப்பு செய்திருந்தது. இவ்வாறான பங்களிப்புகளுக்கு மத்தியிலும், நிறுவனத்தின் தொழிற்படு இலாபமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 147 சதவீதத்தினால் பாரிய வளர்ச்சியடைந்து 730.9 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. 

இக்காலாண்டிற்கான வரிக்கு பிந்திய இலாபம், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 144 சதவீதத்தினால் அதிகரித்து 562.3 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. இது நிறுவனத்தின் வலுவான வருமான வேகத்தை (Earnings momentum) வெளிப்படுத்துவதுடன், அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களின் வருமானமீட்டல்கள் எதிர்வரும் 36 மாதங்களில் இடம்பெறவுள்ள நிலையில், வருங்கால உயர் வளர்ச்சிப் போக்குக்கான அடித்தளத்தையும் இட்டுள்ளது. 2025 டிசம்பர் 31 உடன் முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில், Prime Lands Residencies PLC நிறுவனம் சிறப்பான 3ஆம் காலாண்டு பெறுபேறுகளைப் பதிவுசெய்துள்ளதுடன், ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் (Year-to-date) ஒரு நிலையான செயல்திறனைப் பேணியுள்ளது. இந்த ஒன்பது மாத காலப்பகுதிக்கான வருமானம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24 சதவீதத்தால் அதிகரித்து 7.95 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. அதேவேளை, முன்னரே குறிப்பிட்ட செயல்பாட்டு மற்றும் திட்ட அமுலாக்கல் காரணிகளினால் மொத்த இலாபம் 63 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. மேலும், இந்த ஒன்பது மாத காலப்பகுதிக்கான வரிக்கு பிந்திய இலாபம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 68 சதவீதத்தினால் வலுவாக உயர்ந்து 1.50 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. 

இக்காலாண்டிற்கான பங்கு ஒன்றிற்கான வருமானம் (EPS) 0.60 ரூபாவாகக் காணப்படுவதுடன், கடந்த பன்னிரண்டு மாதங்களுக்கான (TTM) பங்கு ஒன்றிற்கான வருமானம் 1.96 ரூபாவாகும். நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான உயர்வினைத் தொடர்ந்து, அதன் விலை-வருமான விகிதமானது (PE Ratio), சந்தை மற்றும் துறைசார் சராசரிகளை விடவும் கணிசமாக அதிகரித்துள்ளது. இது நிறுவனத்தின் எதிர்கால வருமான வளர்ச்சி குறித்த முதலீட்டாளர்களின் பலத்த எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்கின்றது. 

தலைமைத்துவத்திடமிருந்தான செய்தி 

Prime Group தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “30 வருடங்களுக்கு மேலாக, Prime Lands Residencies PLC இன் தாய் நிறுவனமான Prime Lands (Pvt) Ltd இலிருந்து எமது வாடிக்கையாளர்கள் Prime வர்த்தக நாமத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையையே நிறுவனத்தின் இந்த வலுவான செயல்திறன் வெளிப்படுத்துகின்றது. நிதி ஒழுக்கத்தையும் செயல்பாட்டுத் திறனையும் பேணுவதுடன், உயர்தர கட்டுமானங்களை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.” என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05