Feb 18, 2026 - 09:46 PM -
0
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும் இன்று (18) மீண்டும் கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட தரப்புக்காக சுமார் 50 சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்த நிலையில், இன்றைய தினத்திலும் சந்தேகநபர்களுக்காக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகாமை ஒரு விசேட அம்சமாகும்.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்திடம் ஏதேனும் கூற விரும்புகிறீர்களா என நீதவான் சந்தேகநபர்களிடம் வினவினார்.
அச்சந்தர்ப்பத்தில் தமக்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க வேண்டும் என சந்தேகநபர்கள் நீதவானிடம் தெரிவித்தமையால், அந்த வாக்குமூலத்தை நீதவான் தனது உத்தியோகபூர்வ அறையில் வைத்துப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தார்.
பின்னர் சந்தேகநபர்கள் இருவரையும் மார்ச் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை கொண்டுச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தச் சகோதரர்கள் இருவரும் கொட்டாவையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நேற்று பிற்பகல் பொல்கஸ்ஓவிட்ட பகுதியில் வைத்து 'பொல்கஸ்ஓவிட்ட டிலா' என்பவர் கைது செய்யப்பட்டார்.
அதற்கமைய, 'டிலா' என்பவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.

