Feb 20, 2026 - 09:26 AM -
0
இலங்கையில் வருடாந்தம் இடம்பெற்று வருகின்ற புகழ்பெற்ற திறந்தவெளி கலைச் சந்தையான கலா பொல, 33 வது வருடமாகவும் பெப்ரவரி 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 7 (கிறீன் பாத்) இல் இடம்பெற்றது. கொழும்பு நகரத்தை வண்ணம் மற்றும் படைப்பாற்றலின் பிரமாண்ட வெளிப்பாட்டுடன் உற்சாகப்படுத்தியுள்ளதுடன், நாட்டின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மிகப்பெரிய ஆக்கக் கலைக்கான பொதுத் தளமாக தனது ஸ்தானத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடும் வண்ணம் முழு நாளாக இடம்பெற்ற இந்த நிகழ்வில், கலைப் பரிமாற்றம், கலாச்சார ஈடுபாடு மற்றும் சமூக சொற்பொழிவு ஆகியவற்றிற்காக கலைஞர்கள், கலைச் சேகரிப்பாளர்கள், கலை வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கொழும்பு 07 ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் (கிறீன் பாத்) ஒன்றிணைந்தனர். 2026 ம் ஆண்டு நிகழ்வில் இலங்கை முழுவதிலும் இருந்து 487 உள்ளூர் கலைஞர்கள் மற்றும் சிற்பிகளின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதுடன், 13,689 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்வு சிறப்பாக இடம்பெறுவதற்கு ஜோன் கீல்ஸ் ஊழியர்களின் 257 தன்னார்வலர்கள் உதவிகளை வழங்கியுள்ளனர்.
1993 ம் ஆண்டில் ஜோர்ஜ் கீட் அறக்கட்டளையின் கருத்தாக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு, 1994 ம் ஆண்டு முதல் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் கலா பொல, இலங்கையில் கட்புலக் கலைகள் காட்சிப்படுத்தப்படும் மற்றும் அனுபவிக்கப்படும் விதத்தை மீள்வடிவமைக்கின்ற ஒரு கலாசார அடையாளமாக வளர்ச்சியடைந்துள்ளது. தனது ஸ்தாபக கொள்கைக்கு உண்மையாக நடக்கும் இவ்விழாவானது, எவ்வித தணிக்கையுமின்றி (uncurated) பெருமையுடன் நடத்தப்படுவதுடன், இதில் பங்குபற்றும் அனுபவம் வாய்ந்த மற்றும் வளர்ந்து வரும் ஓவியர்களுக்கும் சிற்பக்கலைஞர்களுக்கும் தமது திறமைகளை வெளிப்படுத்தவும், கலை ஆர்வலர்களுடன் இணையவும், ஏனைய கலைஞர்களுடன் கலந்துரையாடி அறிவைப் பகிர்ந்துகொள்ளவும் மற்றும் தமது வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுபடுத்திக்கொள்ளவும் ஒரு சிறந்த வாய்ப்பினை வழங்குகின்றது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அரசாங்க பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, இலங்கையின் மேல் மாகாண ஆளுநர் திரு. ஹனிஃப் யூசூப் மற்றும் கொழும்பு மாநகர முதல்வர் கௌரவ விரேயி காலி பல்தசார் ஆகியோரும் கலந்து கொண்ட பிரமுகர்கள் மத்தியில் இடம்பெற்றிருந்ததுடன், அவர்கள் அனைவரும் கலைக்கூடங்களுக்கு நேரடியாகச் சென்று, கலைஞர்களுடன் உரையாடி, அரசாங்க முகவர் நிறுவனங்கள் மூலம் நிகழ்வை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் சிறப்பாக இதற்கு உதவலாம் என்பது குறித்து ஏற்பாட்டாளர்களுடன் மதிப்புமிக்க ஆழமான அறிவைப் பகிர்ந்து கொண்டனர்.
கலா பொல 2026 இன் உத்தியோகபூர்வ நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு. மார்க்- ஆண்ட்ரே ஃபிராஞ்ச் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். அவரை திரு. அப்பாஸ் யூசுஃப்அலி தலைமையிலான ஜோர்ஜ் கீட் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் திரு. கிறிஷான் பாலேந்திரா தலைமையிலான ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து வரவேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய திரு. ஃபிராஞ்ச் அவர்கள், “கலா பொல இலங்கையின் கலாச்சாரத் துறையின் ஒரு பகுதியாக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்துள்ளது. இந்த நிகழ்வு கடந்த பல ஆண்டுகளாக எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது என்பதைப் பார்ப்பது மிகவும் போற்றத்தக்கது. இது போன்ற நிகழ்வுகள் சுயமாக நீடித்து நிலைபெறுவது கிடையாது. ஜோர்ஜ் கீட் அறக்கட்டளை மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமம் போன்ற நிறுவனங்கள் இதற்கு தீவிரமாக உதவுவதாலும், கலைஞர்கள் தொடர்ந்து பங்கேற்பதாலும் அவை தொடர்கின்றன. இலங்கையின் கலாச்சாரம் மற்றும் கலைத் துறை மகத்தான அளவில் வளர்ச்சிவாய்ப்புக்களைக் கொண்டுள்ளதுடன் இன்னும் பலவற்றை
அதனால் நிலைநாட்ட முடியும். ஆனால் இந்த வளர்ச்சி வாய்ப்புத்திறனை உணர்ந்து கொள்வதற்கு நிலையான பொது முதலீடு தேவைப்படுகிறது. கலைத் தொழில்கள் மற்றும் தொழில்முறை கலை முகாமைத்துவத்தை வளர்ப்பதற்கு கல்வித் துறையின் வலுவான ஈடுபாடும், கலா பொல போன்ற இணை நிதியுதவி முயற்சிகளைத் தொடர தனியார் துறைக்கு ஊக்கச் சலுகைகளும் தேவை”.
ஜோர்ஜ் கீட் அறக்கட்டளையின் சார்பாக உரையாற்றிய திரு. அப்பாஸ் யூசுஃப்அலி, “கலா பொல எப்போதும் இலங்கையில் கலையை அனைவருக்கும் உரியதாகவும், அனைத்துப் பின்னணிகளையும் சேர்ந்த கலைஞர்களும் ஒன்றுகூடி, தமது திறமைகளைக் காண்பிக்கவும், ஏனையவர்களால் கொண்டாடப்படவும் கூடிய ஒரு இடத்தை உருவாக்குவதாகவும் திகழ்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 500 கலைஞர்களுடன் 33 வது ஆண்டை நாம் எட்டியுள்ள இவ்வேளையில், அனைவருக்கும் வாய்ப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பு முன்னெப்போதையும் விட மிக வலுவாக உள்ளது. கலா பொல நிகழ்வு கலைஞர்களை பார்வையாளர்கள், சேகரிப்பாளர்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளுடன் தொடர்ந்து இணைத்து, இலங்கையின் ஆக்கக்கலைத் துறையை வலுப்படுத்துகிறது. பல ஆண்டுகளாக இந்த தளத்தை நிலைநிறுத்துவதில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் நீண்டகால ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறோம்.”
ஆக்கக்கலைக் காட்சிகளுக்கு மேலதிகமாக, 2026 ம் ஆண்டு நிகழ்வில் ஒட்டுமொத்த பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் பல்வேறு வகையான கூடுதல் செயல்பாடுகள் இடம்பெற்றன. எலிஃபண்ட் ஹவுஸ் நிறுவனத்தின் ஆதரவுடன், Nehara Art மற்றும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் அனுசரணையுடன் Cora Abraham Art ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட சிறுவர்களுக்கான ஆக்கக்கலைப் பகுதியில் 149 சிறுவர்கள் பங்கேற்றனர். பிரகீத் மனோஹன்சவின் நேரடி விளக்கக்காட்சி, தனுஷ்க மதுஷானின் நேரடி சிற்பவாக்க செயல் விளக்கம் மற்றும் பி. பத்மசிறி ரணவீரவின் இரு கரங்களையும் பயன்படுத்தும் நேரடி கலைப்படைப்பு ஆகிய செயல்பாடுகள் அடங்கியிருந்ததுடன், மாலை வேளையில் கலாச்சார பொழுதுபோக்கு, இசை மற்றும் உணவு மற்றும் பான வகை வழங்கல்கள் நிகழ்விற்கு விறுவிறுப்பைச் சேர்த்தன. கலா பொல 2026 நிகழ்வை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அதன் உத்தியோகபூர்வ வங்கிக் கூட்டாளராக ஆதரித்ததுடன், பரிவர்த்தனைகளின் டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்தியது.
கலா பொல 2026 நிகழ்வில் மிகச் சிறந்த வளர்ந்து வரும் கலைஞருக்கான தேசமான்ய கென் பாலேந்திரா நினைவு விருதும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், ஜோர்ஜ் கீட் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலருமான மறைந்த கென் பாலேந்திரா, இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஒரு நிலையான கூட்டாண்மையை ஆரம்பிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இது அறக்கட்டளையின் முக்கிய செயல்பாடுகளை வழிநடத்துவதில் மிக முக்கியமானது. கலா பொல நிகழ்வின் இரண்டாவது ஆண்டிலிருந்து ஜோன் கீல்ஸ் குழுமத்தின் அனுசரணை உறுதிப்பாடு, நிதி மற்றும் செயல்படுத்தல் ஆதரவு இரண்டையும் உள்ளடக்கியதுடன், ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக வளர்ந்து வரும் கலைஞர்களின் எண்ணிக்கையை உள்வாங்கும் வகையில் இந்த நிகழ்வை ஆண்டுதோறும் நடத்த உதவியது. ஒரு சுயாதீன நடுவர் குழுவின் முடிவின் அடிப்படையில், கண்டியைச் சேர்ந்த 26 வயது கலைஞர், அனிமேஷன் தொழில்நுட்பவியலாளர் மற்றும் நிலத்தோற்றக் கலைஞரும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமான சந்தரு செனவிரட்னவுக்கு முதல் தேசமான்ய கென் பாலேந்திரா நினைவு விருது வழங்கப்பட்டது.
இலங்கையின் கலாச்சார நாட்காட்டியில் நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் மற்றும் தனித்துவ அடையாளமான கட்புல கலைகளின் முதன்மையான நிகழ்வான கலா பொல, அதன் பன்முகத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையில் தொடர்ந்து தனித்துவமாகத் திகழ்ந்து வருகிறது. கொழும்பின் மையப்பகுதியில் ஒரு திறந்த, பொது இடத்தில் கலையை ஏற்பாடு செய்வதன் மூலம், நாட்டின் படைப்புக்கலை சார்ந்த பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே வேளையில், படைப்பாளிகள் மற்றும் பார்வையாளர்களிடையே அர்த்தமுள்ள தொடர்புகளை இந்த நிகழ்வு வளர்க்கிறது.
கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட பாரிய பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) இன் சமூகப் பொறுப்புணர்வு (CSR) பிரிவான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் (JKF) நான்கு முக்கிய துறைகளில் ஒன்றான சமூக ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கம் (Social Health and Cohesion) என்பதன் கீழ் கலைத்துறை உள்ளடங்குகின்றது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 7 வெவ்வேறு துறைகளில் 80 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்குவதுடன், 18,000 இற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றது. அத்துடன், LMD சஞ்சிகையினால் கடந்த 20 ஆண்டுகளாக இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் நிறுவனம் என இது தரப்படுத்தப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழுநேர உறுப்பினராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய ஒப்பந்தத்தின் பங்காளராகவும் விளங்கும் JKH, தனது 'நாளைய தேசத்தை வலுப்படுத்தும்' (Empowering the Nation for tomorrow) எனும் சமூகப் பொறுப்புணர்வு நோக்கை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையினூடாக முன்னெடுத்து வருகின்றது.
ஜோர்ஜ் கீட் அறக்கட்டளை தொடர்பான விபரங்கள்
1988 ம் ஆண்டு ஜோர்ஜ் கீட்டின் நண்பர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட ஜோர்ஜ் கீட் அறக்கட்டளை (GKF), கலை மற்றும் கலைஞர்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும், கலையை ஊக்குவிப்பதற்கும், இலங்கைக்கு உதவுவதற்கும் ஆணையைக் கொண்டுள்ளது. அதன் தொடக்கத்திலிருந்து, 35 ஆண்டுகளுக்கும் மேலாக கலா பொல உள்ளிட்ட பல்வேறு தளங்கள் மூலம் இலங்கையில் கலைகளின் முக்கிய ஊக்குவிப்பாளராக GKF திகழ்ந்து வருகிறது. சமீப காலங்களில், குறிப்பாக Sotheby’s International அமைப்பின் ஆதரவுடன் ஒரு தொண்டுப்பணி ஏலம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கலையை உலகளாவிய நேயர்களிடம் கொண்டு செல்வதில் GKF முக்கிய பங்கு வகித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு, பார்வையிடுங்கள் www.kalapola.lk.

