Feb 20, 2026 - 10:19 AM -
0
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமும், இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் பழைமைவாய்ந்த நிறுவனங்களில் ஒன்றுமான சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி (CCS), 2025 ம் ஆண்டுக்கான தேசிய விநியோக முறைமையில் மகத்துவத்திற்கான விருதுகள் நிகழ்வில் மதிப்புமிக்க அங்கீகாரத்துடன் செயல்பாட்டு மேன்மையில் தனது தலைமைத்துவ ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கடந்த ஒக்டோபர் 24 ம் திகதி மொனார்க் இம்பீரியல் நிகழ்வு மண்டபத்தில், கைத்தொழில் அமைச்சின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற வைபவத்தில், மிகப் பாரிய, உற்பத்திப் பிரிவில், மகத்துவத்திற்கான தேசிய விருது, 2025 ம் ஆண்டிற்கான சிறந்த விநியோக முறைமையைப் பின்பற்றும் நிறுவனம் (பாராட்டு விருது) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு இந்நிறுவனம் கௌரவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் சிக்கல் நிறைந்த மற்றும் தொடர்ந்தும் மாறி வருகின்ற சூழலில் உயர் செயல்திறன் கொண்ட உற்பத்தி மற்றும் விநியோக முறைமை நடைமுறைகளில் முன்னோடியாகத் திகழ்வதில் CCS நிறுவனத்தின் இடைவிடாத அர்ப்பணிப்பை இந்த தேசிய அங்கீகாரம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
1866 ம் ஆண்டில் இயங்க ஆரம்பித்த CCS, நாட்டில் மிகவும் மதிக்கப்படும் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவதுடன், புகழ்பெற்ற எலிஃபண்ட் ஹவுஸ் (யானை மார்க்) வர்த்தகநாம தயாரிப்பு வரிசையின் கீழ் தரம் மற்றும் புத்தாக்கத்தின் பாரம்பரியத்திற்கான அடையாளமாகப் பெயர்பெற்று விளங்குகிறது. இந்நிறுவனம் தனது நீண்ட கால வரலாற்றில், கொள்வனவு, உற்பத்தி, விநியோக
ஏற்பாடுகள், விநியோகம் முதற்கொண்டு அவற்றை நுகரும் வாடிக்கையாளர்களுடனான ஈடுபாடுகள் வரை அதன் ஒட்டுமொத்த விநியோக முறைமையை வலுப்படுத்துவதில் தொடர்ச்சியாக மாற்றத்தை உள்வாங்கி வந்துள்ளது. விநியோக முறைமையை டிஜிட்டல் மயமாக்கல், செயல்முறை உச்சப்பயனாக்கம் மற்றும் நிலைபேற்றியல் சார்ந்த செயல்பாடுகளில் அதன் நீடித்த முதலீடுகள் அதிநவீன உற்பத்தியில் சிறந்த முன்னுதாரணமாக இலங்கையில் இயங்கி வருகின்ற முக்கியமான நிறுவனங்கள் மத்தியில் CCS நிறுவனத்தையும் நிலைநிறுத்தியுள்ளன.
புள்ளி விபரங்கள் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்வதில் CCS நிறுவனம் மூலோபாயரீதியாக செலுத்தி வரும் கவனம், துரித விநியோக முறைமை மற்றும் அதன் செயல்பாடுகளின் அனைத்து அம்சங்களிலும் சுற்றுச்சூழல் மீது பொறுப்புணர்வு கொண்ட நடைமுறைகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை இந்த விருது பிரதிபலிக்கிறது. நுகர்வோர் மத்தியில் மாறிவரும் எதிர்பார்ப்புகள் மற்றும் பொருளாதார அழுத்தங்களுடன் உற்பத்தித்துறை தொடர்ந்து பரிணமித்து வருவதால், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன், செயல்பாட்டு ஒழுக்கம் மற்றும் தேசிய தொழில்துறை தராதரங்களை முன்னெடுப்பதில் எதிர்காலத்திற்கு உகந்த கட்டமைப்புகளுக்கள் மீதான தெளிவான அர்ப்பணிப்பை CCS நிறுவனம் நிரூபித்துள்ளது.
ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுகள் துறையின் தலைவர் தமிந்த கம்லத் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “உற்பத்தியில் சிறந்து விளங்குவது என்பது ஒழுக்கமான செயல்முறைகள், செயல்படுவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ள அணிகள் மற்றும் தொழில்துறைக்கு முன்னோடியாக புத்தாக்கங்களை தோற்றுவிப்பதற்கான பேரார்வம் ஆகியவற்றிலிருந்தே ஆரம்பிக்கின்றது என்ற நம்பிக்கையை சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் நீண்ட காலமாக பேணி, அதற்கேற்ப செயற்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்திய மாற்றம் மற்றும் விநியோக முறைமைகளை நவீனமயமாக்கல் மீது மூலோபாயரீதியாக நாம் செலுத்திவரும் கவனம், விநியோக முறைமை முழுவதும் அர்த்தமுள்ள நற்பயன்களை தொடர்ந்து தோற்றுவிக்கிறது என்பதை இந்த அங்கீகாரம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.”
சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சியின் விநியோகச் சங்கிலி மேலாண்மைக்கான தலைவர் சஞ்சீவ ஜெயசுந்தர அவர்கள் இது குறித்து தெரிவிக்கையில், “எங்கள் விநியோக முறைமையானது தீவிரமாக இயங்கும் திறன், தெளிவான காண்புநிலை மற்றும் தொடர்ச்சியான மேம்பாட்டின் மீதான ஆழ்ந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுள்ளமை, CCS நிறுவனத்திடமிருந்து எதிர்பார்க்கப்படும் உயர்ந்த தராதரங்களைக் கட்டிக்காப்பதற்கு இடைவிடாமல் உழைக்கும் எங்கள் அணிகள் மற்றும் கூட்டாளர்களின் கூட்டு முயற்சிகளின் சிறப்பினை வலுவாக உறுதிப்படுத்துகின்றது. டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகள் மற்றும் மிகச் சிறந்த நடைமுறைகள் மூலம் எங்கள் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”
இந்த தேசிய அங்கீகாரத்துடன், இலங்கையில் செயல்பாட்டு மகத்துவம், வாடிக்கையாளர் மதிப்பு மற்றும் தொழில்துறை மாற்றத்தை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் உற்பத்தி மற்றும் விநியோக முறைமையில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் தனது பங்கை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

