செய்திகள்
அமெரிக்க வர்த்தக யுத்தம்: இலங்கைக்கு இலாபமா? நட்டமா?

Feb 21, 2026 - 05:19 PM -

0

அமெரிக்க வர்த்தக யுத்தம்: இலங்கைக்கு இலாபமா? நட்டமா?

உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்ப்பொன்றை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று (20) அறிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பானது உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மையை அதிகரிப்பதோடு, இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இது இலங்கைக்குச் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என சில பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதேநேரம், புதிய 10% உலகளாவிய வரியுடன் இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு பாதகமான பாதிப்பு ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர். 

அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பின்படி, டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி அறிவித்த உலகளாவிய பரஸ்பர தீர்வை வரிகள் சட்டவிரோதமானவை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தீர்ப்புடன் ஜனாதிபதி டிரம்ப் விதித்த அனைத்து மேலதிக வரிகளும் ரத்து செய்யப்பட்டன. எனினும், நீதிமன்ற உத்தரவின் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உலகளாவிய ரீதியில் புதிய 10% வரியை அறிவிக்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் இந்த வரிகளை விதித்ததாக டிரம்ப் குறிப்பிட்டாலும், அந்தச் சட்டம் தேசிய அவசர நிலையொன்றின் போது மட்டுமே பயன்படுத்தப்பட முடியும் என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 

பிரதம நீதியரசர் ஜோன் ரொபர்ட்ஸ் தலைமையிலான 6-க்கு 3 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பில், இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிப்பதற்கு அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தியதன் மூலம் ஜனாதிபதி தனது அரசியலமைப்பு வரம்புகளை மீறியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2025 மே 28 அன்று மன்ஹாட்டனில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

ரத்து செய்யப்பட்ட வரிகளிலிருந்து இதுவரை சுமார் 175 பில்லியன் டொலர் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டுமா என்பது தொடர்பில் சட்டரீதியான நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி டிரம்ப், இதுவொரு "கவலைக்குரிய" தீர்ப்பு என வர்ணித்துள்ளதுடன், வெளிநாடுகள் இதனால் மகிழ்ச்சியடையும் எனவும் குறிப்பிட்டார். 

இலங்கை மீதான தாக்கம் என்ன? 

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் 88% வர்த்தகப் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறி, இலங்கை மீது 44% வரியை விதிப்பதாக டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் முதன்முதலில் அறிவித்தார். பின்னர் அது 20% ஆகக் குறைக்கப்பட்டது. 

அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கை மற்றும் தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல், போர்ச் சூழல் ஆகியவற்றுக்கு மத்தியில் உலகம் முழுவதும் பாரிய நிச்சயமற்ற நிலை உருவாகி வருவதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத் துறைப் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். 

புதிய 10% வரி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை தெளிவான நிலைப்பாடு இல்லை என அவர் சுட்டிக்காட்டினார். “விதிக்கப்பட்ட வரிகள் நீக்கப்படுமா? அல்லது அதனால் ஏற்பட்ட நட்டங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது பற்றி இன்னும் தெளிவில்லை,” எனப் பேராசிரியர் கூறினார். 

எவ்வாறாயினும், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிச்சயமாக அந்நாட்டின் வரிக் கொள்கையை மாற்றுவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார். இது இலங்கையைப் போன்ற சிறிய திறந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார். 

உலகப் பொருளாதாரம் சிக்கலான கட்டத்தில் - பேராசிரியர் டியூடர் வீரசிங்க அமெரிக்காவின் 10% இறக்குமதி வரி மற்றும் புவிசார் அரசியல் கொள்கைகள் காரணமாக உலகப் பொருளாதாரம் ஒரு சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளதாகப் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவிக்கிறார். 

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னெடுக்கும் புவிசார் அரசியல் கொள்கைகளினால் இந்த நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். "மத்திய கிழக்கு மற்றும் சீனா தொடர்பில் டிரம்ப் பின்பற்றும் கொள்கைகளுடன், உலகப் பொருளாதாரம் இப்போது முற்றிலும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒரு சிக்கலான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது" என அவர் கூறினார். 

வர்த்தகக் கொள்கைகள், புவிசார் அரசியல் நெருக்கடிகள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு மோதல்கள் ஆகியவற்றின் சேர்க்கை உலகளாவிய வர்த்தகம், முதலீடு மற்றும் விநியோகச் சங்கிலி அமைப்புகளில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தலாம் என அவர் சுட்டிக்காட்டினார். 

இலங்கையின் ஏற்றுமதிக்கு சவால்! 

10% அமெரிக்க வரியால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வசந்த அத்துகோரள, "150 நாட்களுக்குள் இந்த நிலைமை உலகப் பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தலாம்" என்றார். 

இந்த நிலைமை இலங்கையின் ஏற்றுமதித் துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும், குறிப்பாக அமெரிக்கச் சந்தையை நம்பியிருக்கும் ஏற்றுமதித் துறைகளுக்கு இது சவாலாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, ஏற்றுமதியைப் பன்முகப்படுத்துதல், புதிய வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்குதல் மற்றும் ஏனைய நாடுகளுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியன இலங்கைக்கு அவசியமானவை என அவர் வலியுறுத்தினார். 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் அமெரிக்கப் பங்குச்சந்தை உயர்வடைந்த போதிலும், உலகளாவிய வர்த்தக முறைமையில் நிச்சயமற்ற நிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகப் பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

அதன்படி, இந்த புதிய சூழ்நிலையில், இலங்கை உள்ளிட்ட சிறிய பொருளாதார நாடுகள் தீர்க்கமான வர்த்தக மற்றும் பொருளாதாரக் கொள்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தமது பொருளாதாரத்தைப் பாதுகாப்பது அவசியமாகியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05