Feb 21, 2026 - 09:43 PM -
0
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (21) நடைபெறவிருந்த 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் 'சூப்பர் 8' சுற்றின் முதல் ஆட்டம் கடும் மழையால் கைவிடப்பட்டுள்ளது.
குரூப் 2-வில் நடைபெறவிருந்த இத்தொடரின் 41-வது போட்டியான இதில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருந்தன.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அலி ஆகா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தார்.
எனினும், நாணய சுழற்சியின் பின் சிறிது நேரத்திலேயே கொழும்பில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. மழை தொடர்ந்து இடைவிடாது பெய்த காரணத்தினால், ஆடுகளம் முழுமையாகத் தார்பாய்களால் மூடப்பட்டிருந்தது. பல மணிநேரக் காத்திருப்பிற்குப் பின்னரும் மழை ஓயாததால், ஓவர்களைக் குறைத்து ஆட்டத்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை என நடுவர்கள் தீர்மானித்தனர்.
இதன் விளைவாக, இப்போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
போட்டி மழையால் கைவிடப்பட்டதால், சூப்பர் 8 சுற்றின் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
அரையிறுதிக்குச் செல்லும் முனைப்பில் சூப்பர் 8 சுற்றை வெற்றியுடன் தொடங்கக் காத்திருந்த இரு அணி வீரர்களுக்கும், மைதானத்தில் காத்திருந்த ரசிகர்களுக்கும் கொழும்பின் இந்த அடைமழை பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

