Feb 23, 2026 - 04:28 PM -
0
சூர்யா - ஜோதிகா நடித்த மாயாவி படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து "கடவுள் தந்த அழகிய வீடு" என்ற பாடல் மூலம் புகழ் பெற்றவர் நடிகை விஷ்ணு பிரியா. சென்னை திருவான்மியூரை சேர்ந்த சூர்ய நாராயணன் என்பவரின் மகளான நடிகை விஷ்ணு பிரியாவுக்கு ரமேஷ் கிருஷ்ணா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, கணவர் ரமேஷ் கிருஷ்ணாவுக்கு உடல்நலம் பாதித்ததையடுத்து, சிகிச்சைக்காக தந்தையுடன் கொடைக்கானல் சென்றார். கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் பின்புறம் தந்தைக்கு சொந்தமான பங்களாவில் தங்கி 2018 ஆம் ஆண்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அப்போது கார் சாரதி பிரபாகரன் என்பவருடன் விஷ்ணு பிரியாவுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. அந்த உறவில் இருந்து வெளிவற தந்தை சூர்ய நாராயணன் பலமுறை அறிவுறுத்தியும், சாரதி பிரபாகரனுடனான விஷ்ணு பிரியாவின் உறவு தொடர்ந்து நீடித்துள்ளது.
இந்தநிலையில் சாரதி பிரபாகரன் படுகொலை செய்யப்படார். விஷ்ணு பிரியாவின் தந்தை சூர்ய நாராயணன்தான் கூலிப்படையை ஏவி பிரபாகரனை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்ய நாராயணன், ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் சூர்ய நாராயணன் கொடைக்கானலில் உள்ள அவரது தங்கும் விடுதியுடன் கூடிய பங்களாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 21 ஆம் திகதி நள்ளிரவு, சூர்ய நாராயணனின் பங்களாவில் வேலை பார்த்துவந்த ஆறுமுகம் என்பவர், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து, அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்துவந்த கொடைக்கானல் பொலிஸார், சூர்ய நாராயணனின் பங்களாவிற்குள் செல்ல முயன்றபோது வெளியே பூட்டு போடப்பட்டிருந்தது.
பூட்டை உடைத்து பொலிஸார் உள்ளே சென்றபோது, பங்களாவில் வேலை பார்த்துவந்த ஆறுமுகம் மற்றும் முரளி ஒரு அறையில் இருந்துள்ளனர். மற்றொரு அறையில், நாற்காலியில் அமர்ந்தபடி உடல் முழுவதும் டேப் சுற்றப்பட்ட நிலையில் சூர்ய நாராயணன் சடலமாக கிடந்துள்ளார். சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் உடற்கூறாய்வுக்காக கொடைக்கானல் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் ஆறுமுகம் மற்றும் முரளியிடம் விசாரணையை தொடங்கினர். 2 நாட்களுக்கு முன்னர், கோயம்புத்தூரைச் சேர்ந்த 5 பேர் விடுதிக்கு தங்க வந்ததாக அவர்கள் கூறினர். மேலும், 5 பேரும் ஆவணங்கள் ஏதும் கொடுக்காமல் விடுதியில் தங்கியதும், விடுதியை விட்டு அவர்கள் 2 தினங்களாக வெளியில் எங்கும் செல்லாததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 21 ஆம் திகதி மாலை, ஆறுமுகம் மற்றும் முரளியை கை, கால்களை கட்டி ஒரு அறையில் அடைத்த அந்த கும்பல், மறு அறையில் சூர்ய நாராயணனை நாற்காலியில் அமரவைத்து, உடல் முழுவதும் டேப்பை இறுக்கமாக சுற்றியுள்ளனர். இதில் சூர்ய நாராயணன் மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், 5 பேர் கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. அப்போது விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை திருடி சென்றதோடு, சூர்ய நாராயணன், ஆறுமுகம், முரளி ஆகியோர் அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றதாக சொல்லப்படுகிறது.
இதில் நெடுநேரம் போராடி, ஆறுமுகம் கயிற்றை சிறிது கழற்றி காப்பாற்றுமாறு கூச்சலிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, டிரைவர் பிரபாகரன் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்கவே சூர்ய நாராயணன் கொலை நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்தக்கொலை பழிதீர்க்க நடத்தப்பட்டதா? இல்லை நகைக்காக நடத்தப்பட்டதா? என பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

