Feb 23, 2026 - 05:08 PM -
0
கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான கால காலக்கெடுவை மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.
2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் நடவடிக்கைகள், மோசடிகள், நம்பிக்கைப் பொறுப்பின் குற்றவியல் ரீதியான மீறுகை, அதிகாரம் மற்றும் அரச வளங்கள் அல்லது வரப்பிரசாதங்களை முறைகேடாகப் பயன்படுத்துதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல் ,சட்டவிரோத ஆட்சேர்ப்புக்கள், நியமனங்கள், கொள்முதல் வழிகாட்டுதல்களை மீறுதல், அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதில் இடம்பெற்ற முறைகேடுகள், முறையான நடைமுறைகளுக்குப் புறம்பாக முன்னெடுக்கப்பட்ட வழக்கு நடவடிக்கைகள், இணக்கப்பாடுகள் மற்றும் மேற்கூறிய செயல்களால் அரச சொத்துக்கள் அல்லது வருமானத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்துக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவிற்கு, பொதுமக்கள் தமது முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 2026 மார்ச் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான எழுத்துமூலமான முறைப்பாடுகள் அல்லது தகவல்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் செயலாளர், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு,152, காலி வீதி,கொழும்பு 03 எனும் முகவரிக்கு அனுப்ப முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்படும் அனைத்து முறைப்பாடுகளிலும் முறைப்பாட்டாளரின் பெயர், முகவரி, தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். எவரேனும் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாவிடின் அது தொடர்பாக ஆணைக்குழுவிடம் கோர முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆணைக்குழுவிடம் வாய்மூலமாகத் தகவல்களை வழங்க விரும்பும் நிறுவனங்கள் அல்லது நபர்கள், 011 2 301 735 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம், 2026 மார்ச் மாதம் 16 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான ஒரு திகதியைத் ஒதுக்கிக் கொள்ள முடியும்.

