Feb 23, 2026 - 11:54 PM -
0
இலங்கை மின்சார சபை, பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ள கடிதத்தின்படி, அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த எட்டு நிலக்கரி கப்பல்களினால் மதிப்பிடப்பட்டுள்ள நேரடி நட்டம் 7,672 மில்லியன் ரூபாவாகும்.
900 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனைக் கொண்ட நுரைச்சோலை லக்விஜய மின்நிலையம் நிலக்கரி தகனம் மூலமே இயங்குகிறது.
அதற்காக இறக்குமதி செய்யப்பட்ட 8 கப்பல்களின் நிலக்கரி தரமற்றவை என அண்மையில் ஆய்வக பரிசோதனை அறிக்கைகள் மூலம் தெரியவந்ததை அடுத்து சர்ச்சை ஏற்பட்டது.
இவ்வாறான பின்னணியில், இலங்கை மின்சார சபை இது தொடர்பில் பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
இந்த எட்டு கப்பல்களின் தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்படக்கூடிய மதிப்பிடப்பட்ட நேரடி நட்டங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, முதலாம் கப்பலில் இருந்து 595.1 மில்லியன் ரூபாவும், இரண்டாவது கப்பலில் இருந்து 288.5 மில்லியன் ரூபாவும், மூன்றாவது கப்பலில் இருந்து 1,047.4 மில்லியன் ரூபாவும், நான்காவது கப்பலில் இருந்து 865 மில்லியன் ரூபாவும் நேரடி நட்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஐந்தாவது கப்பலில் இருந்து 1,144.2 மில்லியன் ரூபாவும், ஆறாவது கப்பலில் இருந்து 1,197.7 மில்லியன் ரூபாவும், ஏழாவது கப்பலில் இருந்து 974.9 மில்லியன் ரூபாவும், எட்டாவது கப்பலில் இருந்து 1,559.3 மில்லியன் ரூபாவும் நேரடி நட்டம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த எட்டு கப்பல்களின் தரமற்ற நிலக்கரி மூலம் முன்னெடுக்கப்படும் மின் உற்பத்தியினால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ள நேரடி நட்டம் 7,600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானது.
இவ்வாறான பின்னணியில், தரம் குறைந்த நிலக்கரியைக் கொண்ட 8 கப்பல்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 9ஆவது கப்பலின் நிலக்கரியும் தரமற்றது என்பது தரவு மைய அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) வெளிப்படுத்தியுள்ளார்.

