Feb 24, 2026 - 04:57 PM -
0
அக்குரேகொடவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2026 பெப்ரவரி 13 ஆம் திகதி பதிவான இந்த இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பில், மூன்று நாட்களுக்குள் பிரதான துப்பாக்கிதாரி உட்பட ஐவர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூவர் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், ஏனைய சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் சில சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக 12 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், வரும் நாட்களில் மேலதிக முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

