Feb 24, 2026 - 07:25 PM -
0
அரசாங்கத்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 200 ரூபா நாளாந்த வரவுக் கொடுப்பனவுக்குச் சட்டப்பூர்வமான பின்னணியை உருவாக்குமாறு அரச நிதிப் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் நடைபெற்ற அரச நிதிப் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது விடயங்களை விரிவாக விளக்கிய குழுவின் தலைவர், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்குக் குழு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், எனினும் இந்தக் கொடுப்பனவை வழங்கும் முறைமை தொடர்பான சட்டப்பூர்வமான நிலைமை குறித்துக் கட்டாயம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைவாக, எந்தவொரு வர்த்தமானி அறிவித்தலும் இன்றி தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், இதனை எந்த நேரத்திலும் முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த 200 ரூபா தொகை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பாகச் சேர்க்கப்படுவதில்லை என அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டனர்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் 3 வருட காலத்திற்குச் செய்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்தப் காலக்கெடு முடிவடைந்ததன் பின்னர் இந்தக் கொடுப்பனவுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
உரிய நிதி ஒழுக்கமின்றி அரச நிதியைப் தனியார் நிறுவனங்களின் சம்பளம் வழங்குவதற்காகப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என அரச நிதிப் பற்றிய குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன்போது, 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பாராளுமன்றத்தினால் இந்த நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையாலேயே உரிய கொடுப்பனவு வழங்கப்படுவதாக அதிகாரிகள் பதிலளித்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி, இந்தக் கொடுப்பனவிற்கான ஏற்பாடுகள் 'அபிவிருத்தி மானியமாகவே' சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பொதுவாக அபிவிருத்தி மானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், இந்தக் கொடுப்பனவை 'உற்பத்தி ஊக்குவிப்பு' என அழைப்பதே மிகவும் பொருத்தமானது என பிரதி திறைசேரிச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், நடைமுறையில் ஜனவரி மாதத்திற்காக இதுவரை வழங்கப்பட்ட கொடுப்பனவுகளிலோ அல்லது உரிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலோ அவ்வாறான தேவையொன்று குறிப்பிடப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. மேலும், நாளாந்தம் வழங்கப்படும் 200 ரூபா கொடுப்பனவை ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் கணக்கீட்டிலிருந்து தவிர்ப்பது உரிய சட்டங்களுக்கு அமையுள்ளதா என்பது குறித்தும் குழு கேள்வியெழுப்பியது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்துச் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டீர்களா என வினவியபோது, சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கமைவாக, இவ்வாறான சிக்கலான இடங்கள் திருத்தப்பட வேண்டும் எனவும், இந்தக் கொடுப்பனவு தொடர்பில் ஏதேனுமொரு சட்டப்பூர்வமான பின்னணி உருவாக்கப்பட வேண்டும் எனவும் அரச நிதிப் பற்றிய குழு திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

