Feb 24, 2026 - 08:47 PM -
0
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான உலகளாவிய சுங்கவரி சதவீதம் இன்று (24) முதல் 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய உலகளாவிய பரஸ்பர சுங்கவரி சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தமையே இந்த சுங்கவரி மாற்றத்திற்குக் காரணமாகும்.
அமெரிக்காவின் சுதந்திர தினமாகக் குறிப்பிட்டு, இந்த உலகளாவிய பரஸ்பர சுங்கவரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தினார்.
எவ்வாறாயினும், குறித்த சுங்கவரியை அறிமுகப்படுத்தியதில் ஜனாதிபதி தனது அதிகாரங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமெரிக்க உச்ச நீதிமன்றம், குறித்த வரிகள் சட்டவிரோதமானவை என அண்மையில் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு மூன்று மணித்தியாலங்கள் முடிவடைவதற்கு முன்னரே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீத உலகளாவிய சுங்கவரி விதிக்கப்படும் என வலியுறுத்தினார்.
பின்னர் அந்த சுங்கவரியை 15 சதவீதமாக அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானித்தார். சுங்கவரி தொடர்பான ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதைத் தவிர்க்க முற்படும் நாடுகள் தொடர்பில் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களின்படி, இன்று முதல் 10 சதவீத சுங்கவரி மாத்திரமே அமுல்படுத்தப்படவுள்ளது.
1974 ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் 122 ஆவது பிரிவின் பிரகாரம், காங்கிரஸின் அனுமதியின்றி 150 நாட்களுக்கு வரியை விதிப்பதற்காக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க காங்கிரஸில் ஜனாதிபதி ட்ரம்ப் ஆற்றும் வருடாந்த உரை நாளை நடைபெறவுள்ளதுடன், இதன்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் புதிய சுங்கவரி தொடர்பில் ஜனாதிபதி மேலதிக கருத்துகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

