வணிகம்
டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சி: ஹட்ச் மற்றும் இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆகியன இணைந்து இ

Feb 25, 2026 - 10:33 AM -

0

டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சி: ஹட்ச் மற்றும் இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆகியன இணைந்து இ

டிஜிட்டல் வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் இடைவெளியைப் போக்கி, இலங்கையில் கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்களுக்கும் நவீன டிஜிட்டல் வசதிகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் ஒரு தேசிய இலக்குடன் Gamata Sanniwedanaya என்ற நிகழ்ச்சித்திட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. அதனை மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல உதவுவதற்காக ஹட்ச் நிறுவனமும், இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் தற்போது ஒன்றிணைந்து பணியாற்ற முன்வந்துள்ளன. இத்தேசிய இலக்கினை அடைவதற்கு ஆதரவளிக்கும் ஒரு முக்கியமான தொழிற்துறைப் பங்காளர் என்ற ரீதியில் பின்தங்கிய பிரதேசங்களிலும் டிஜிட்டல் வசதிகள் கிடைக்கப்பெறுவதை முன்னெடுக்கும் தனது அர்ப்பணிப்பை ஹட்ச் தற்போது மேலும் வலுப்படுத்தியுள்ளது. இத்தகைய பிரதேசங்களில் தொடர்பாடல் வசதிகளில் நிலவி வருகின்ற இடைவெளிகள் காரணமாக அங்கு வாழ்கின்ற மக்களுக்கான வளர்ச்சி வாய்ப்புக்களுக்கு மிக நீண்ட காலமாக பாரிய முட்டுக்கட்டை நிலவி வருகின்ற நிலையில், இம்முயற்சி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்பாடல் என்பது சமூகங்களின் முன்னேற்றத்திற்கு இடமளிக்கும் ஒரு அடிப்படை வசதி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இம்முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. கல்வி, மருத்துவ வசதிகள், சிறு வர்த்தக முயற்சிகளின் வளர்ச்சி, மின்-வர்த்தக நடவடிக்கைகளில் பங்கேற்றல், மற்றும் அன்றாட வாழ்வில் டிஜிட்டல் வழங்கும் வசதிகள் என நகரப்புறங்களில் வாழ்கின்ற மக்கள் ஏற்கனவே அனுபவித்து வருகின்ற வாய்ப்புக்களுக்கு நம்பகமான மொபைல் புரோட்பான்ட் வசதி வழிவகுக்கின்றது. தமது பயன்பாட்டுக் கட்டணப் பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும், பணத்தை அனுப்புவதற்கும், அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அல்லது தமது வர்த்தக கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் கூட கிரமப்புறங்களில் வாழ்கின்ற பலரும் நீண்ட தூரம் பிரயாணிக்க வேண்டிய சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஹட்ச் நிறுவனம் தற்போது இப்பிரதேசங்களில் வலுவான மற்றும் இடையறாத வலையமைப்பு சேவையை நீட்டிப்பதன் மூலமாக, இலங்கையின் கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்களுக்கும் சம வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள உதவியளிப்பதுடன், டிஜிட்டல் பொருளாதாரத்தில் அவர்களும் அர்த்தமுள்ள வழியில் பங்கேற்பதற்கு இடமளிக்கின்றது. 

இதன் விளைவை உடனடியாகவே உணர்ந்து கொள்ள முடியும் என்பதுடன், மிக நீண்ட பலனை அளிக்கவல்லது. பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்கின்ற மாணவர்கள் தற்போது எவ்விதமான இடையூறுகளுமின்றி இணையவழியில் தமது கற்றல் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது. விவசாயிகளும், நுண் தொழில் முயற்சியாளர்களும் சந்தை விலைகளை அறிந்து கொள்ளவும், அதனை விநியோகிக்கும் முறை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளவும், மற்றும் டிஜிட்டல் வழிமுறையில் கொடுப்பனவுகளை முன்னெடுக்கவும் மொபைல் கருவிகள் அவர்களுக்கு பயனளிக்கின்றன. மருத்துவ சேவைகளை வழங்குகின்றவர்கள் நேரடியாக செல்ல வேண்டிய தேவையைப் 

போக்கி மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும், பொதுச் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தவும் தொடர்பாடலின் பயனை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியும். மேம்பட்ட தொடர்பாடல் வசதியானது காலப்போக்கில் புதிய பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவித்து, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் வளர்ச்சியை ஆதரித்து, தேசிய அளவில் அனைவரும் டிஜிட்டல் வசதிகளின் பயன்பாட்டைப் பெற்றுக்கொள்வதை வலுப்படுத்தும். 

Gamata Sanniwedanaya நிகழ்ச்சித்திட்டத்தை விரிவாக்கும் முயற்சிகளின் தற்போதைய கட்டத்தில், லகேகல, கிவுலவதிய, வண்ணம்குலம, வெலிகொல்லாவ, கோமரன்கல்ல, பன்வலகந்த, இடமேகம, மகாலந்த, எதுரபோத்த கிழக்கு, மற்றும் வெலிமனான ஆகிய பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களுக்கு புரோட்பான்ட் சேவைகளை ஹட்ச் அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் தொலைதொடர்பாடல்கள் வசதிகள் மிகவும் குறைவான பிரதேசங்களாக இவை காணப்படுவதுடன், இங்கு வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்குதடையற்ற மொபைல் புரோட்பான்ட் வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் நீண்டகாலமாக பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளனர். ஹட்ச் நிறுவனம் தற்போது மொபைல் புரோட்பான்ட் சேவைகளை இப்பிரதேசங்களில் அறிமுகப்படுத்துவதனூடாக, இப்பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு டிஜிட்டல் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளித்து, அவர்கள் இது வரை பெற்றுக்கொள்ள முடியாதிருந்த வாய்ப்புகளை பெறவும் அவர்களுக்கு இடமளிக்கின்றது. 

ஹட்ச் நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப மற்றும் தகவல் அதிகாரியான அசங்க ரணசிங்க அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வலுவான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதி மிகவும் தேவையானது 

என்பதை வலியுறுத்தி கருத்து வெளியிடுகையில், “இலங்கையிலுள்ள மொபைல் தொலைபேசி இணைப்பைக் கொண்டுள்ளவர்கள் மத்தியில் சுமார் 30% பேர் இன்னமும் 2G தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளமையும், கிராமப்புறப் பிரதேசங்களில் பரவலான அளவில் புரோட்பான்ட் வசதி கிடைக்கப்பெறாமையும் இன்னமும் முக்கிய ஒரு சவாலாகக் காணப்படுகின்றன. பயனளிக்கும் வகையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னெடுப்பதற்கும், திறன்மிக்க வழியில் e-Governance நடைமுறையை அறிமுகப்படுத்துவதிலும் அடிப்படை தொலைதொடர்பாடல் இணைப்பு வசதிகளை ஏற்படுத்துவது முக்கியமான முதற்படியாக காணப்படுகின்றது. Gamata Sanniwedanaya நிகழ்ச்சித்திட்டத்தினூடாக மக்கள் எப்பிரதேசத்தில் வாழ்ந்தாலும், அனைவருக்கும் டிஜிட்டல் வசதிக்கான வாய்ப்பினை வழங்கி வலுவூட்டுவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். இதனை வலையமைப்பு சேவைகளை விரிவுபடுத்தும் ஒரு முயற்சி என்று மட்டும் கூறி விட முடியாது. இது மக்கள் தமது வாழ்வைக் கட்டியெழுப்பி, அனைவருக்கும் வளமளிக்கக்கூடிய எதிர்காலமொன்றைத் தோற்றுவிப்பதை மேம்படுத்த உதவுகின்ற கருவிகளை அவர்களுக்கு வழங்கும் ஒரு முயற்சியாகும்.”

Comments
0

MOST READ
01
02
03
04
05